Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கவனமாகப் பேசுங்கள்

நம்முடைய வார்த்தைகள்ஒவ்வொன்றும் அதற்குரிய காலம் வரும் போது பிரதிபலிக்கும். அப்போது நம் வார்த்தையே நமக்கு எதிராகவோ ஆதரவாகவோ அமையலாம். இதை ராமாயணம் அற்புதமாகத் தெரிவிக்கிறது. அடிக்கடி ராமனைப் பார்க்க வேண்டும் என்று தசரதனுக்குத் தோன்றும். உடனே சுமந்திரனை அனுப்பி அழைத்து வரச் சொல்லுவான். ராமனும் ஆவலோடு தந்தையைப் பார்க்கச் செல்வான். எந்த மாளிகைக்கு என்றால் பெற்ற அன்னையான கோசலையின் மாளிகைக்கு அல்ல, வளர்த்த அன்னையான கைகேயியின் மாளிகைக்குத்தான் செல்வான். அங்கே இவன் வரவை எதிர்பார்த்து வாசலிலேயே புன் சிரிப்போடு, அணைத்துக் கொள்வதற்காக காத்திருப்பான் தசரதன்.அப்படித்தான் இன்றும் காத்திருப்பான் என்று எதிர்பார்த்த ராமனுக்கு எதிரே கைகேயி நின்று கொண்டிருந்தாள். வழக்கமான புன்னகை அவளிடத்தில் இல்லை. ஆனாலும் ராமன் அதை கவனிக்கவில்லை. தசரதனுக்கு தருகின்ற அத்தனை மரியாதையையும் தன்னை வளர்த்த தாயான கைகேயிக்கு தரத் தவறுவதில்லை ராமன். கைகேயி மீது எல்லையற்ற பாசம் கொண்டவன் ராமன். அதனால் தன்னுடைய தலை கீழே படும்படியாக தன்னை வளர்த்த தாயாகிய கைகேயியை வணங்குகின்றான். இப்பொழுது கைகேயி நுட்பமாக பேசுகின்றாள்.‘‘உன் தந்தை உனக்குச் சொல்ல வேண்டிய சில விஷயங்களை நான் சொல்லலாம் என்று நீ கருதினால் நான் சொல்லுகின்றேன்.’’

ராமன்; ‘‘அம்மா, எனக்கு நீ வேறு அப்பா வேறல்ல. இருவர் சொன்னாலும் எனக்கு ஒரே மதிப்பு தானே. அது மட்டும் இல்லை. எனக்கு தாயும் தந்தையும் நீங்கள்தான்.’’ இப்பொழுதுதான் அந்த வெடிகுண்டுப் பாட்டை எடுத்து வீசுகின்றாள் கைகேயி.

``ஆழி சூழ் உலகம் எல்லாம்

பரதனே ஆள, நீ போய்த்

தாழ் இருஞ் சடைகள் தாங்கி,

தாங்க அருந் தவம் மேற்கொண்டு,

பூழி வெங் கானம் நண்ணி,

புண்ணியத் துறைகள் ஆடி,

ஏழ் - இரண்டு ஆண்டின் வா” என்று,

இயம்பினன் அரசன்’’

என்றாள்.கம்பராமாயணத்தில் உள்ள மிக முக்கியமான பாடல்களில் இந்தப் பாடலும் ஒன்று. தவிர்க்க முடியாத பாடல். எத்தனை உளவியல் நுட்பத்தோடு கம்பன் பாடல்களை இயற்றி இருக்கிறான் என்பதற்கு இந்தப் பாடல் உதாரணம். பொதுவாக உணர்ச்சிவசப்படுபவர்கள் நிதானத்தை இழக்கிறார்கள். உணர்ச்சிவசப்படாமல் இருப்பவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக எதையும் விட்டுவிடாமல் பேசுகிறார்கள். நின்று நிதானமாக வார்த்தைகளை கவனமாகக் கையாண்டு பேசும் கலை, உணர்ச்சிவசப்படாதவர்களுக்கே கைவந்த கலை என்பதை நிரூபிக்கிற பாடல் இது.

பரதன் ஆள என்று சொல்லாமல், பரதனே ஆள என்பதில் உள்ள பிரி நிலை ஏகாரத்தை கம்பன் கவனமாகக் கையாண்டு இருக்கின்றான். ஆட் சியில் ராமருக்கு மட்டுமல்ல லட்சுமணனுக்கோ சத்ருகணனுக்கோ பங்கு தர விரும்பவில்லை கைகேயி என்பதை நுணுக்கமாக உணர்த்தத்தான் பரதனே ஆள என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றாள். சரி அப்படியானால் ராமனுக்கு என்ன வேலை? அந்த வேலையைத்தான் மூன்று பகுதியாகப் பிரித்துச் சொல்லுகிறாள்.

1. நீ அயோத்தியில் இருக்கக் கூடாது என்பதற்காக “நீ போய்” என்கின்ற

வார்த்தையைப் பயன்படுத்துகின்றாள்.

2. காட்டுக்குப் போக வேண்டும். எப்பேர்பட்ட காடு? ஏதோ பூங்கா போல் இருக்கக்கூடிய ஒரு இடம் அல்ல!புழுதியும், தங்குவதற்கு கொடுமையான சூழ்நிலைகளும் விலங்குகளும் உள்ள அடர்ந்த கொடுமையான காடு. (ராமன் திரும்பி வரக்கூடாது அல்லவா?)

3. ராமனுக்கு நல்லது செய்வது போல, நீ போய் புண்ணிய நதிகளில் நீராட வேண்டும், தவம் செய்ய வேண்டும், அந்த தவத்துக்கு உறுதுணையான கோலத்தைப் பூண வேண்டும் (தாழிருஞ் சடைகள் தாங்கி)இவ்வளவும் சொல்லிவிட்டு, அவன் “இத்தனை காலம் காட்டில் வாழ

வேண்டுமா என்று நினைத்து விடுவான் என்பதை எண்ணி, 14 ஆண்டுகள் என்ற நீண்ட காலத்தைச் சொல்லாமல் மறைமுகமாக அதை குறுக்கி சொல்வதாக ஏழு இரண்டு ஆண்டு என்று சொல்லும் நயத்தைக் கவனிக்க வேண்டும்.

இதைவிட மிக முக்கியமான விஷயம், இதை கைகேயி, தானே தன் கருத்தாகச் சொல்கிறாள் என்று ராமன் நினைத்து விடக்கூடாது என்பதற்காக “இயம்பினன் அரசன்” என்கின்றாள். பழி தன் மேல் வந்து விடக்கூடாது அல்லவா அடுத்து உன்னுடைய தந்தைதான் சொன்னார் என்று சொன்னால் அங்கே பாசம் வந்துவிடும் ஆனால் இது அரசு ஆணை. இங்கே பாசத்துக்கு இடம் கிடையாது. நீயாக இருந்தாலும் நானாக இருந்தாலும் அரசன் ஆணையை தலைமேல் கொண்டு செயல்பட வேண்டும் என்பதைச் சொல்லாமல் சொல்லுவதன் மூலமாக, நீ மறுக்கக்கூடாது; (மறுக்க முடியாது) என்பதை அழுத்தம் திருத்தமாகசொல்லுகின்றாள் கைகேயி என்பதை நினைக்கின்ற பொழுது, உணர்ச்சிவசப்படாத, தான் கொண்ட எண்ணத்தை நிறைவேற்றிக் கொள்ள வேண்டும் என்கின்ற ஒற்றை எண்ணத்தோடு செயல்படுகின்ற ஒருத்தியை நம்மால் காண முடிகிறது.கம்பனில் ஒரு அற்புதத்தை நாம் காணலாம்.

ஒரு பாடலுக்கும் இதற்கு முன் அல்லது பின்னால் வரக்கூடிய வேறு ஒரு பாடலுக்கும், கண்ணுக்குத் தெரியாத தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். இப்பொழுது இதற்கு முன்னால் ஒரு காட்சியைப் பாருங்கள். ராமனிடம் ‘‘உனக்கு முடிசூட்டப் போகிறேன் “என்று சொன்ன தசரதன், “தந்தையின் பேச்சை மறுக்காத புதல்வரைப் பெற்றவர்களே துன்பத்தில் இல்லாதவர்கள்” என்று ஒரு கருத்தைச் சொல்லுகின்றான். ``சொல் மறா மகப்பெற்றவர் அருந்துயர் துறந்தார்’’ என்பது அந்த பாடலின் கடைசி அடி. அவன் ஆசைப்பட்டபடியே ராமன் இருப்பது அவனுக்கே கண்டமாக முடிகிறது. காரணம், தன் பேச்சை இப்போது கேட்காமல் ராமன் இருந்தால் நல்லது என்று தசரதனே மறைமுகமாக நினைக்கிறான். அடுத்து ஒரு விஷயம் பாருங்கள்; ராமன் தசரதனின் சொல்லுக்கு (முடி சூட்டிக் கொள்ள) இணங்குகின்றான். அப்பொழுது ‘‘தந்தையே உங்கள் பேச்சை நான் ஏற்றுக் கொள்கிறேன்” என்று மட்டும் சொல்லவில்லை. அரசன் எதைச் சொன்னாலும் அது எனக்கு நீதி. அதனால் ஏற்றுக்கொள்ளுகின்றேன் என்று ராமன் சொல்கிறான்.

(யாது கொற்றவன் ஏவியதோ, அது செயல் அன்றோ, நீதி எற்கு என நினைத்தும் அப்பணி தலை நின்றான்)இப்படி இருவர் வாக்கு மூலங்களின் அடிப்படையில் இந்தப் பாடலைப் பாருங்கள். “ராமா! அரச கட்டளை எதுவாக இருந்தாலும், அதுதான் உனக்கு நீதி என்பது தெரியும், அதை நீயே சொல்லி இருக்கிறாய், அதனால் நீ போய் 14 வருடம் காட்டிற்குச் சென்று தவம் செய்து வர வேண்டும் என்று அரசன் சொன்னான். இதுவும் அரசகட்டளைதான்” என்பதைச் சொல்லாமல் சொல்வதாக இந்தப் பாடல் அமைகிறது. நம்முடைய வார்தைகள் ஒவ்வொன்றும் அதற்குரிய காலம் வரும் போது பிரதிபலிக்கும். அப்போது நம் வார்த்தையே நமக்கு எதிராகவோ, ஆதரவாகவோ அமையலாம் என்பதற்கு எடுத்துக்காட்டு இந்தப் பாடல்களும், பாடல்களுக்கான சம்பவங்களும்.

தேஜஸ்வி