Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சிவகங்கை மாவட்டத்தில் தடமில்லாமல் கிடக்கும் தவழ்ந்த ஆறுகள்: அரசு நடவடிக்கை எடுத்தால் மட்டுமே அழிவிலிருந்து காப்பாற்ற முடியும்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் போதிய பராமரிப்பாததால் ஆறுகள் அனைத்தும் இருந்த தடமே இல்லாமல் அழியும் நிலையில் உள்ளன. சிவகங்கை மாவட்டத்தில் பொதுப்பணி துறை கண்மாய்கள் 968, ஒன்றிய கண்மாய்கள் 4 ஆயிரத்து 871 உள்ளன. இவைகள் தவிர மணிமுத்தாறு, பாலாறு, சருகணியாறு, நட்டாறு கால்வாய், வைகையாறு, உப்பாறு, பாம்பாறு, தேனாறு, விருசுழியாறு ஆகிய ஆறுகள் உள்ளன. பெயரளவில் 9 ஆறுகள் இருந்தாலும் இவைகள் அனைத்தும் தற்போது தேடப்படும் நிலையிலேயே உள்ளன. இதில் வைகையாற்றில் மட்டுமே ஆண்டுக்கு ஒரு முறை வைகை அணையிலிருந்து நீர் திறக்கப்படும் போது சிவகங்கை மாவட்டம் வழியாக ராமநாதபுரம் மாவட்டம் வரை நீர் செல்கிறது. மற்ற ஆறுகள் அனைத்தும் பராமரிப்பில்லாமல் முற்றிலும் அழியும் நிலையிலேயே உள்ளன.

இந்த ஆறுகள் மூலமே விவசாய கண்மாய்களுக்கான நீர் ஆதாரம் முழுமையாக கிடைத்துள்ளது. இந்த 9 ஆறுகளில் பெரும்பாலானவை கண்மாய்களில் துவங்கி ஓர் ஆற்றுடன் மற்றொன்று சேரும் வகையில் உள்ளன. கண்மாய்கள் நிறைந்தாலும் ஆற்றின் மூலம் பிற கண்மாய்களுக்கு நீர் செல்லும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன. சில ஆறுகள் மதுரை, புதுக்கோட்டை மாவட்டங்களில் துவங்குகின்றன. 50 ஆண்டுகளுக்கு முன்பே தடுப்பணைகள், சிறிய அணைகள், பாலங்கள், தரைப்பாலங்கள், மடைகள், கலுங்குகள் என நீர் முற்றிலும் வீணாவதை தடுக்கும் வகையில் ஆறுகளுக்கும், கண்மாய்களுக்கும் இடையே பல்வேறு கட்டுமான பணிகள் செய்யப்பட்டுள்ளன.

ஆனால் கடந்த 30 ஆண்டுகளில் ஆறுகளில் மணல் கடத்தல், புதர்கள், சீமைக்கருவேல மரங்கள் முளைத்து நீர் வழிப்பாதைகள் இல்லாமல் போனதால் ஆறுகள் அனைத்தும் அடையாளமே இல்லாமல் அழிந்து வருகின்றன. இதுகுறித்து விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்தில் 9 ஆறுகள் இருப்பதற்கான எந்த அடையாளமும் இல்லாமல் முற்றிலும் அழிக்கப்பட்டு வருகின்றன. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான கண்மாய்களுக்கு ஆற்று வழியே நீர் வழிப்பாதைகள், பாசன கட்டமைப்பு வசதிகள் முன்னோர்களால் செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பு, மணல் கடத்தல், சீமைக்கருவேல மரங்களால் வழித்தடங்கள், கட்டமைப்புகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. ஆறுகள் அனைத்தும் பராமரிப்பில்லாமல் போனதால் கண்மாய்கள் வறண்டு போய் விவசாயம் அழிந்து வருகிறது.

ஆண்டிற்கான சராசரி மழை பெய்தாலும் கண்மாய்களுக்கு நீர் வரத்து இல்லாததற்கு ஆறுகள் பராமரிப்பின்றி போனதும் காரணமாகும். ஆறுகளை பராமரிப்பது என்ற திட்டம் அரசு சார்பில் செயல்படுத்தப்படவில்லை. ஆறுகளில் உள்ள சீமைக்கருவேல மரங்கள், புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசு சார்பில் போதிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே ஆறுகள் காப்பாற்றப்படும். இவ்வாறு கூறினர்.