Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

விதை நேர்த்தி செய்து பயன்பெறலாம் விவசாயிகளுக்கு வேளாண் துறை அறிவுறுத்தல்

சிவகங்கை, அக்.25: விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.இது குறித்து அவர்கள் தெரிவித்துள்ளதாவது: பயிர்களை, விதை மூலம் பரவக்கூடிய பூஞ்சான நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கு விதையுடன் பூஞ்சான மருந்து கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். விதை மூலம் பரவும் இலைப்புள்ளி, இலைக்கருகல், இலை உறை அழுகல் மற்றும் குலை நோய் போன்ற பூஞ்சான நோய்களை தடுக்க 1 கிலோ விதைக்கு 2 கிராம் வீதம் கார்பன்டைசிம் கலந்து 24 மணி நேரம் வைத்திருந்து பின் விதைக்க வேண்டும். ரசாயன மருந்துகள் மூலம் விதை நேர்த்தி செய்வதை விரும்பாத விவசாயிகள், 1 கிலோ விதைக்கு, 4 கிராம் வீதம் டிரைக்கோடெர்மாவிரிடி அல்லது 1 கிலோ விதைக்கு, 10 கிராம் வீதம் சூடோமோனாஸ் ப்ளோரசன்ஸ் என்ற உயிரியல் பூஞ்சான மருந்தினை விதைப்பதற்கு முன் விதையுடன் கலந்து விதைக்க வேண்டும்.

1 ஏக்கர் விதைக்க தேவையான விதைக்கு, விதை நேர்த்தி செய்ய ரூ.10 முதல் ரூ.20 வரை மட்டுமே செலவாகும். உயிர் உரங்கள் மூலம் விதை நேர்த்தி செய்வதால், உயிர் உரங்கள் காற்றிலுள்ள தழைச்சத்தை கிரகித்து பயிருக்கு கொடுக்கும். அதனால், இளம் பயிரின் இலைகள் கரும்பச்சை நிறத்துடன் செழிப்பாக வளரும். பயிர்கள் கூடுதல் மகசூல் கொடுப்பதனால், கால் பங்கு தழைச்சத்து இடுவதை குறைக்கலாம். அதன் மூலம் உரச்செலவை குறைக்கலாம்.

உயிர் பூஞ்சான கொல்லிகள் மற்றும் திரவ உயிர் உரங்கள் அனைத்தும் மாவட்டத்தின் அனைத்து வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதுமான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் வேளாண்மை விரிவாக்க மையங்களில் தேவையான உயிர் பூஞ்சான கொல்லிகள் மற்றும் திரவ உயிர் உரங்களை வாங்கி, தங்களது விவசாயத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எனவே, விவசாயிகள் பயிர் பாதுகாப்பு மருந்துகள் மற்றும் உரச்செலவை குறைக்க, விதை நேர்த்தி செய்து விதைத்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளனர்.