Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சைகை மொழி

நன்றி குங்குமம் தோழி

‘‘உலகம் சத்தங்களால் மட்டுமல்ல மௌனங்களாலும் நிறைந்தது. நம்மில் பலருக்கும் கேட்கும் சத்தம் சிலருக்கு மட்டும் கேட்பதில்லை. கேட்கும் திறனற்று... வாய்பேச முடியாதவர்களாய்... விரல் அசைவில் மட்டுமே சிலர் பேசிக் கொள்கிறார்கள். நாம் பேசுகின்ற மொழிகளைப் பேசாத இவர்களின் மௌன மொழிக்கு ஆழமும் அர்த்தமும் அதிகம்.70 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் செவித்திறன் குறைபாடுடன் வாய்பேச முடியாதவர்களாக உலகம் முழுவதும் பரவி இருக்கின்றனர். இதில் 80 சதவிகிதத்திற்கும் அதிகமானோர் வெளிநாடுகளிலும் வளர்ந்த நாடுகளிலும் வசிக்கின்றனர். இதில் 2 சதவிகிதத்தினருக்கு மட்டுமே இங்கு சைகை மொழி கற்கும் சூழல் இருக்கிறது.

சைகை மொழிக்கான கல்வி நிறுவனங்கள் கேரளாவிலும், டெல்லியிலும் மட்டுமே செயல்படுவதால் இங்கு சென்று படிப்பதற்கு ஆகும் பணச் செலவு மற்றும் பயண தூரம் அதிகம் என்பதால் யாரும் முன்வருவதில்லை. விளைவு, காதுகேளாத வாய்பேச முடியாதவர்களுடன் எவ்வாறு தொடர்பு கொள்வது என்று பலருக்கும் இங்கு தெரிவதில்லை. இதனால் பெரும்பாலான காதுகேளாதவர் புறக்கணிக்கப்படுகிறார்கள். அல்லது கேலிக்கு உள்ளாகிறார்கள்.

சைகை மொழி குறித்த விழிப்புணர்வு நமது நாட்டில் சுத்தமாகவே இல்லை’’ என பேச ஆரம்பித்தவர், பிரபல கல்லூரியின் சோஷியல் வொர்க் துணை பேராசிரியர் அல்போன்ஸ் ரெத்னா. டிசம்பர் 3 இயக்கத்தின் உதவியுடன், சைகை மொழி பேசுபவர்களுடன் இணைந்து, சைகை மொழிக்கான 3 நாள் பயிற்சி வகுப்பு ஒன்றை மிகச் சமீபத்தில் நடத்தி முடித்திருக்கிறார். அவரிடம் பேசியதில்...

‘‘இதுவும் நாம் இந்த சமூகத்திற்கு செய்யும் சேவைதான்’’ என்றவர், ‘‘ஸ்பானிஸ், பிரஞ்சு என புதிதாக ஒரு மொழியை கற்கும்போதே, இன்னொரு மொழி பேசும் சமூகத்துடன் நாம் தொடர்பு கொள்ளப் போகிறோம், நமது எண்ணங்களை அவர்களிடம் பகிர்ந்துகொள்ளப்போகிறோம் என்கிற மகிழ்ச்சி ஏற்படும். அதுபோலத்தான் சைகை மொழியும். நம்மோடு வாழுகிற ஒரு சமூகத்தை இணைக்கின்ற பாலம்தான் சைகை மொழி. இரண்டு கைகளையும் உயரே தூக்கி அசைப்பதுதான் சைகை மொழி பேசுபவர்களின் கைதட்டல். இவர்களின் கைதட்டல் இப்படித்தான் என பொதுவெளியில் யாருக்கும் தெரிவதில்லை’’ என்கிறார் பேராசிரியர்.

‘‘தங்கள் உளவியல் சிக்கலையும், பிரச்னைகளையும் பிறரிடம் வெளிப்படுத்த முடியாத நிலையில், குரலற்றவர்களாக பெரும்பாலும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டு, அவர்கள் சமூகத்து மக்களிடத்தில் மட்டுமே இவர்கள் பழகுவார்கள். இது வேறொரு சூழலை அவர்களுக்குள் ஏற்படுத்துவதை எங்களால் உணர முடிந்தது.

2010ல் மாற்றுத்திறனாளிகளுக்கான தன்னார்வலராக நுழைந்து, அவர்களின் பிரச்னைகளை முன்னெடுப்பது, போராட்டங்களை வழிநடத்துவது, அவர்களோடு களத்தில் நிற்பதென இயங்கத் தொடங்கினேன். அப்போது காது கேளாத மாற்றுத்திறனாளி சமூகத்து மக்களுடன் நாம் இணைந்திருக்கிறோமா என்கிற கேள்வி என்னைத் தொலைத்துக் கொண்டே இருந்தது.

10 ஆண்டுகளுக்கு முன்பே எபிளிட்டி என்கிற தன்னார்வ அமைப்பின் மூலம் சைகை மொழியின் சில அடிப்படை விஷயங்களை பயிற்சியாக எடுத்துக்கொண்டு, அந்த சமூகத்தினருடன் சைகையில் பேசி பேசியே அவர்கள் மொழியினை கற்றுக் கொண்டேன். அதன் தொடர்ச்சிதான் இந்த 3 நாள் பயிற்சி வகுப்பு. என்னோடு ரோஜா, நித்யா, நந்தனா என சைகை மொழி பேசுபவர்களும், சைகை மொழி பெயர்ப்பாளர்கள்(interpreters) எனச் சிலரும் இணைந்தனர்.

உயர் பதவிகளை அலங்கரிக்கும் காதுகேளாத மாற்றுத்திறனாளிகளில் சிலரை முன்னிறுத்தி 20 பேருடன் பயிற்சி வகுப்பு மிகச் சிறப்பாகவே நடந்தது. அன்றாடம் வீடுகளில் பேசும் இயல்பான வார்த்தைகள் இங்கு சைகை மொழியில் கற்றுக் கொடுக்கப்பட்டது’’ என்றவரைத் தொடர்ந்து பேசியவர் சைகை மொழி பெயர்ப்பாளர் ரோஜா.‘‘தாய்மொழி பேச பள்ளிக்கூடம் செல்லவேண்டும் என்கிற அவசியம் இல்லைதானே. பிறந்ததில் இருந்தே தாய் மொழியை உள்வாங்கித்தானே வார்த்தைகளை பேசப் பழகுகிறோம்.

அதுபோலத்தான் எனக்கு இந்த மொழி. என் பெற்றோர் இருவருமே வாய்பேச முடியாத காதுகேளாத மாற்றத்திறனாளிகள். பெற்றோருடன் சைகை மொழி பேசிப்பேசியே, அந்த மொழி இயல்பாக எனக்கு வந்தது. அவர்களின் நண்பர்களும் இந்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால், அவர்களோடும் சைகை மொழியிலேயே பேசும் நிலை இருந்தது. எனது பெற்றோரால் சைகை மொழி எனக்கும் என் அண்ணனுக்கும் தாய்மொழி ஆனது. நாங்கள் சைகை மொழி பெயர்ப்பாளராகவே மாறிப்போனோம்’’ என்கிறார் ரோஜா வெகு இயல்பாக.

‘‘பெற்றோர் இருவருமே டெஃப் என்பதால் அவர்கள் சமூகத்தில் எங்களை சில்ட்ரன் ஆஃப் டெஃப் அடல்ட் (CODA) அதாவது, கோடா என அழைப்பார்கள். அதுவே 18 வயதிற்குள் இருந்தால் கிட் ஆஃப் டெஃப் அடல்ட் (KODA) என்பார்கள்’’ என்றவர், ‘‘எழுத்தும் இலக்கணமும் இன்றி நமது எண்ணங்களைப் பிரதிபலிக்கும் மொழி உண்டென்றால் அது சைகை மொழிதான்’’ என்கிறார் அழுத்தமாக.

‘‘300 விதமான சைகை மொழி உலகம் முழுவதும் பேசப்படுகிறது. ஒவ்வொரு நாட்டுக்கும் அவர்களின் மொழிக்கேற்ப சைகை மாறும். எனது அண்ணன் பி.காம் முடித்து, பிரிட்டிஷ் சைன் லாங்வேஜில் மொழி பெயர்ப்பாளராக லண்டனில் பணியாற்றி வருகிறார். இந்தியர்களின் ஆங்கில உச்சரிப்பும், பிரிட்டிஷ் நாட்டின் ஆங்கில உச்சரிப்பும் ஒன்று என்பதால் அந்த நாட்டின் காதுகேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு அவரால் சுலபமாக சைகையில் மொழிப்பெயர்ப்பு செய்ய முடிகிறது.

அவரைப்போலவே நானும் சட்டக் கல்லூரியில் படித்துக் கொண்டே, ஃப்ரீலான்ஸ் சைன் லாங்வேஜ் மொழி பெயர்ப்பாளராக சென்னையில் செயல்படுகிறேன். வாய் பேச முடியாது என்பதுடன் பார்வையும் தெரியாது என்கிற மாற்றுத்திறனாளிகளின் கைகளைத் தூக்கி சைகை மொழி செய்கிற, தொட்டுணரும் மொழி பெயர்ப்பாளர் (tactile interpreter) பணியும் எனக்குத் தெரியும்’’ என நம்மை மேலும் ஆச்சரியப்படுத்துகிறார் சட்டக் கல்லூரி மாணவி ரோஜா.‘‘நமது நாட்டில் காதுகேளாதோர் சமூகத்திற்கு சைகை மொழி தெரிந்த வழக்கறிஞர்கள் இல்லை. இவர்கள் சட்டப் பிரச்னைகளை சந்திக்க நேர்ந்தால் சைகை மொழி பெயர்ப்பாளராக அவர்களுக்காக நீதிமன்றத்தில் நான் இருப்பேன்’’ என கூடுதலான தகவலையும் பதிவு செய்து விடைபெற்றார்.

அவரைத் தொடர்ந்து பேசியவர் சைகை மொழி பெயர்ப்பாளரான நித்யா. ‘‘மொழி தெரியாத ஊர்களில் இருக்கும்போது, நமது தமிழ் மொழியினைப் பேசுகிற குரல் எங்காவது ஒலித்தால் எந்த அளவுக்கு மகிழ்ச்சியை நாம் வெளிப்படுத்துவோமோ அதுமாதிரிதான் இந்த மொழியும். அவர்கள் சமூகத்தில் இல்லாத ஒரு நபர் அவர்கள் மொழியை பேசினால் அது அவர்களுக்கு மகிழ்ச்சி மற்றும் வசதி’’ என்றவர், ‘‘உன் சமூகத்திற்காக நான் இருக்கிறேன் என்கிற அடிப்படை சிந்தனைதான் என்னையும் இதில் இணைத்தது. இது என்னால் முடிந்த ஒருசிறு பங்களிப்பு. என்னோட கடமை’’ என்கிறார் புன்னகைத்தவராக.

‘‘இவர்களுக்காக நான் செய்வது லீகல் இன்டர்பிரிட்டேஷன். அதாவது, காவல் நிலையங்களிலும் வழக்கு சார்ந்த விஷயங்களிலும் பொது நிகழ்ச்சி மேடைகளிலும் செய்தியை இவர்களுக்கு மொழி பெயர்ப்பது. கூடவே தனியார் தொலைக்காட்சிகளிலும் சைகை மொழி பெயர்ப்பாளராக பணியாற்றி வருகிறேன்.

கல்லூரியில் ஆங்கில இலக்கியம் முடித்த நிலையில் தன்னார்வ அமைப்பில் இணைந்து பணி செய்யும் ஆர்வம் இயல்பாய் எனக்கு வந்தது. அப்போது சான்றிதழ் படிப்பாக சைகை மொழி படித்து, காதுகேளாதவருக்கான அமைப்பு ஒன்றில் பணியாற்றினேன். அந்த மக்களுடன் பேசிப் பேசியே சைகை மொழி இயல்பாக வந்தது. பிறகு சைகை மொழி பெயர்ப்பாளருக்கான சான்றிதழ் படிப்பையும் முடித்து இதனையே எனது வேலையாகவும் செய்யத் தொடங்கினேன்.

உணவு தானம், உடை தானம் மாதிரிதான் இதுவும். அவர்களை இந்த உலகத்தோடு தொடர்புபடுத்துகிறோம். அவர்களின் குரலை நமது வார்த்தைகளில் ஒலிக்கிறோம். “ஹாய்” என்கிற இயல்பான வார்த்தையை அவர்களின் சைகை மொழியில் அவர்களுக்குச் சொல்லும்போது அவர்கள் மகிழ்ச்சி அடைவார்கள். அந்த மகிழ்ச்சிதான் இதில் சேவை. மாற்றுத்திறனாளிகளை பரிதாபத்திற்கு உரியவர்களாக பார்ப்பதை முதலில் நிறுத்திவிட்டு, அடுத்த கட்டத்திற்கு அவர்கள் வாழ்வை நகர்த்திச் செல்ல நம்மால் என்ன செய்ய முடியும் என யோசியுங்கள்’’ என்றவாறே விடைபெற்றார் சைகை மொழி பெயர்ப்பாளர் நித்யா.

தொகுப்பு: மகேஸ்வரி நாகராஜன்