Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பரமனும் பலாமரமும்

தென்னகத்தின் சுவைமிக்க முக்கனிகளில் இரண்டாவது கனி, பலா. இது வேர்ப்பலா, கிளைப்பலா எனப் பல வகைப்படுகிறது. முள்ளோடு கூடிய கெட்டியான மேல் தோலையும், சடைசடையான உள்தோலையும் அதனுள் கொட்டைகளையுடைய சுளைகளையும் கொண்டது. குற்றாலம், திருநீலக்குடி, இடும்பாவனம், கற்பகநாதர் கோயில், திருவாலங்காடு, திருப்பூவனம், திருச்செந்துறை முதலிய தலங்களில், பலா மரத்தின் அடியில் பெருமான் வீற்றிருக்கின்றார். இதில், குற்றாலத்திலுள்ள பலாமரம் சிவபெருமானாகவும், சிவனின் இருப்பிடமாகவும் வேத வடிவாகவும் போற்றப்படுகிறது.

‘‘குரும்பலா’’ என்று போற்றப்படும் இம்மரம் இருக்குமிடம் தனிச் சந்நதியாகத் திகழ்கிறது. இம்மரத்திற்கு தினமும் வழிபாடு செய்யப்படுகிறது. திருஞானசம்பந்தர், பல தலங்களை சிவபெருமானுக்கு உரிய இடம் இதுவே என்று கூறி அருளியதைப் போலவே, குற்றாலத்திற்கு வந்த போது, நம்பனுக்குரிய இடம் ‘‘குறும் பலாவே’’ என்று கூறி இம்மரத்தைச் சிறப்பித்துப் பாடியுள்ளார். ‘‘திருந்தமதிசூடி’’ எனும் அப்பதிகம், ‘‘குறும்பலாவைக் கும்பிட்டு ஏத்தியது’’ என்று அறிஞர்களால் குறிக்கப்பட்டுள்ளது. தெய்வீக இயற்கை எழிலை வியந்து பாடும் பதிகங்களில் இது முதன்மையானது.

இதில், ஆண் யானை தனது பெண்யானை யுடன் இம்மரத்தை வணங்குவதாகப் பாடியுள்ளது குறிப்பிடத்தக்கதாகும். குற்றாலத் தலபுராணத்திலுள்ள, குறும்பலா சருக்கத்தில், வேதமே குரும்பலா வடிவில் செழித்து வளர்ந்து இறைவனுக்கு நிழல் பரப்பித் தவமியற்றி வருகிறது என்று கூறப்பட்டுள்ளது. பிரணவம் இதன் வேராகவும், கருமகாண்டம், ஞானகாண்டம் பெருங்கிளை

களாகவும் வேதமொழிகள் சிறுகிளைகளாகவும், வேதாந்த நுண்பொருளான உபநிடதம் தளிக்களாகவும் உள்ளதென்று போற்றப்படு கின்றன. கனிகள் நான்கு வேதங்களின் சாரமான அறம், பொருள், இன்பம், வீடு எனும் நான்காம். இதற்குத் தண்ணீர் ஊற்றியவர், மூம்மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்த பயனைப் பெறுவர். இதன் கீழிருந்து ஓதப்படும் மந்திரம் ஒன்றுக்குக்கோடியாய் பயன் தரும். இதனடியில் செய்யும் தவம், தானம் யாவுமே, பலமடங்கு பலன் தருமென்று புராணம் விவரிக்கிறது. குற்றாலக் குறவஞ்சி எனும் நூலில் இம்மரத்தைப்புகழ்ந்து கீழ்வரும் பாடல் பாடப்பட்டுள்ளது.

``கிளைகளாய் கிளைத்தபல கொப்பெலாம்

சதுர்வேதம் கிளைகளீன்ற

களையெல்லாம் சிவலிங்கம் கனியெல்லாம்

சிவலிங்கம் கனிகளீன்ற

சுளையெலாம் சிவலிங்கம் வித்தெலாம்

சிவலிங்க சொரூபமாக

விளையுமொரு குறும் பலாவின்முளைத் தெழுந்த

சிவக் கொழுந்ததை வேண்டுவமே’’

இதன் பொருள்:

வேதமே மரமாக உள்ளது. கிளைகள், கனிகள், கனிகளிலுள்ள சுவைகள், சுளைக் குள்ளேயுள்ள விதைகள் யாவுமே சிவலிங்கம். இம்மரமே சிவக்கொழுந்தாக விளங்குகிறது. இம்மரத்தின் கனிகளை யாரும் உண்பதில்லை. திருஞானசம்பந்தர் பாடிப் பரவிய மற்றோர் தலமான திருச்செந்துறை சந்திரசேகரர் ஆலயத்திலும், பலாமரம் தலவிருட்சமாக உள்ளது. இதன் பழங்களையும் மக்கள் உண்பதில்லை. குரங்குகளுக்கு உணவாகப் போட்டுவிடுகின்றனர்.

வேதாரண்யத்தை அடுத்துள்ள தலம், இடும்பவனம். இதற்கு அருகிலுள்ள கற்பகநாதர் குளம் எனப்படும் திருக்கடிகுளம் முதலியதலங்களிலும் பலா, தலவிருட்சமாக உள்ளது. திருவிடைமருதூருக்கு அருகிலுள்ள திருநீலக்குடி மனோக்கிய நாதசுவாமி ஆலயத்தின் தலமரம், பலாமரமாகும்.

வடக்குப் பிராகாரத்தில் செழித்து வளர்ந்துள்ள இம்மரத்தின் கனிகளை, இறைவழி பாட்டுக்கு மட்டுமே பயன்படுத்துகின்றனர். கோயிலுக்கு வெளியே எடுத்துச் சென்றால், அவை புழுத்துவிடுகிறது. இவற்றைத் திருடி உண்பவர்களின் தோலில், பலாப்பழத்தின் மேல் உள்ளது போல் முள்முள்ளாகச் சொறி உண்டாகித் துன்புறுத்துகிறது என்று பொதுவாக நம்பப்படுகிறது. பலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. வருக்கை, சக்கை, பனசம், பாகல், கோளிப்பாகல் என்பன போன்ற வகைகள் பாரதத்தில் விளைகின்றன.

ஜெயசெல்வி