Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

சிற்பமும் சிறப்பும்

கிருஷ்ணர் ஆட்சிபுரிந்த துவாரகை

ஆலயம்: ‘ஜகத் மந்திர்’ என்றழைக்கப்படும் துவாரகாதீஷ் கோயில், குஜராத் மாநிலத்தில் உள்ள ‘தேவபூமி துவாரகா’ மாவட்டத்தில் துவாரகா நகரின் மத்தியில் உள்ளது. உள்ளூர் மக்களால் ``துவாரகாநாத்ஜி’’ ஆலயம் என்று அழைக்கப்படுகிறது.

துவாரகை

கோமதிநதி அரபிக்கடலுடன் சங்கமமாகும் இடத்தில் அமைந்துள்ள இவ்வாலயத்திற்கு, நெடிய வரலாறு உண்டு. துவக்கத்தில் கிருஷ்ணனின் கொள்ளுப் பேரனான வஜ்ரநாபியால் 2500 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகக் கூறப்படும் இவ்வாலயத்தின் கட்டமைப்பு, பல்வேறு காலகட்டங்களில் பல மன்னர்களால் புனரமைக்கப்பட்டது. மேற்கு பாரதத்தின் வல்லபி பகுதியை ஆட்சிசெய்த மைத்ரிகா வம்சத்தின் அமைச்சரான சிம்ஹாதித்யாவின் பொ.ஆ.574 காலச் செப்புப் பட்டயத்தில் துவாரகை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள் உள்ளன.

பொ.ஆ.1472ல் அன்னியப் படையெடுப்பாளர் முஹமது பேக்தாவால் முழுவதுமாக அழிக்கப்பட்ட இவ்வாலயம், பின்னர் 15-16 ஆம் நூற்றாண்டில் இன்று காணும் சாளுக்கிய ஆலய வடிவமைப்பில் கட்டப்பட்டது. அருகிலுள்ள ‘பேட் துவாரகா தீவு’, சிந்து சமவெளி நாகரீக ஹரப்பன் காலத்தின் (பொ.ஆ.முன் 1600) முக்கியமான தொல்பொருள் தளமாகும்.

73வது திவ்யதேசம்

108 வைணவ திவ்யதேசங்களில், இந்த துவாரகாதீசர் கோயில், 73வது திவ்ய தேசமாகப் போற்றப்படுகிறது. மூலவர் - துவாரகாநாத் / துவாரகாதீசர் என்றழைக்கப்படும் கல்யாண நாராயணன், மேற்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் சங்கு, சக்ர, தாமரை, கதாயுதம் ஏந்தி கருமை நிறத்துடன் அருள்பாலிக்கிறார்.

தாயார் - பாமா, ருக்மணி.

விமானம் - ஹேமகூட விமானம்.

மங்களாசாசனம்

பெரியாழ்வார் ஐந்து பாசுரங்கள், ஆண்டாள் நான்கு பாசுரங்கள், திருமழிசை ஆழ்வார் ஒரு பாசுரம், திருமங்கை ஆழ்வார் இரண்டு பாசுரங்கள், நம்மாழ்வார் ஒரு பாசுரம் ஆக மொத்தம் 13 பாசுரங்களை ஆழ்வார்கள் இத்தலம் (துவரை/துவராபதி) பற்றி மங்களாசானம் செய்து அருளியுள்ளனர்.

‘சுவரில் புராண! நின் பேர் எழுதிச் சுறவ நற் கொடிகளும் துரங்கங்களும்

கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும்

காட்டித் தந்தேன் கண்டாய் காமதேவா

அவரைப் பிராயம் தொடங்கி என்றும்

ஆதரித்து எழுந்த என் தட முலைகள்

துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே’

- நாச்சியார் திருமொழி

‘தடவரைவாய் மிளிர்ந்து மின்னும் தவள நெடுங்கொடி போல்

சுடரொளியாய் நெஞ்சினுள்ளே தோன்றும் என் ஜோதி நம்பி!

வடதடமும் வைகுந்தமும் மதிள் துவராபதியும்

இடவகைகள் இகழ்ந்திட்டு என்பால் இடவகை கொண்டனையே’

- பெரியாழ்வார்

சூரிய - சந்திரக்கொடி

அழகிய சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த 72 தூண்கள் தாங்கி நிற்கும் ஐந்து தளங்கள் கொண்ட இக்கோயில் விமானம், 256 அடி உயரம் கொண்டதாகும். தினமும் விமானத்தின் உச்சியில் ஏற்றப்படும் முக்கோண வடிவிலான சூரிய - சந்திர உருவங்கள் பதித்த 52 அடி நீளமுள்ள பெரிய கொடி இக்கோயிலின் மற்றொரு சிறப்பு ஆகும். எவ்வித ஏணிகளோ, படிகளோ, என பிடிப்புகள் ஏதுமின்றி வெறும் கைகளால் பற்றிக் கொண்டே இந்த 256 அடி உயர விமானத்தில் ஏறி தினமும் கொடி ஏற்றி இறக்குகின்ற நிகழ்வை பன்னெடுங்காலமாக ஒரு குடும்பத்தினர் பாரம் பரியமாக செய்து வருகின்றனர். இக்கொடி ஏற்றும் வைபவத்திற்கு வேண்டி நேர்ந்து கொள்ளும் பக்தர்கள், இரண்டாண்டுகள் முன்பே பதிவு செய்ய வேண்டும்.

மது ஜெகதீஷ்