Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

பள்ளி மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த புத்தகம்: அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார்

ஆலந்தூர்: குடிமக்கள் நுகர்வோர் மற்றும் குடிமை நடவடிக்கை குழு சார்பில், காலநிலை மாற்றம் குறித்த கல்வி எழுத்தறிவு மாநாடு, கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று நடந்தது. சிஏஜி நிர்வாக இயக்குனர் எஸ்.சரோஜா முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில், காலநிலை மாற்றம் குறித்து பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்ளும் வகையில், போக்கஸ் என்ற புத்தகத்தை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிட்டார். பின்னர் அவர் பேசியதாவது:

ஐக்கிய நாடுகளின் பேரிடர் ஆபத்து குறித்த மதிப்பீட்டு அறிக்கையில், இந்தியா இயற்கை பேரழிவுகளால் அதிகம் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் ஒன்றாக இருக்கிறது. அதிலும் நம் நகரங்கள் கூடுதல் பாதிப்பிற்கு உள்ளாகக்கூடியவையாக இருக்கின்றன. இந்த கருத்தரங்கம் மூலம் காலநிலையை பொது சமூக பார்வையோடு அரசுடன் இணைந்து முன்னெடுத்து செல்ல வேண்டிய அவசியத்தை உணர்த்துகிறது.

இந்த புத்தகம் ‌மாணவர்களுக்கு காலநிலை மாற்றம், அதன் பாதிப்புகள், செயல்படுத்தக்கூடிய தீர்வுகளை எளிதாக தெரிந்து கொள்ளும் நோக்கத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை செயலர் செந்தில்குமார் பேசுகையில், ‘‘இந்தியாவின் சுற்றுச்சூழல் 2024 என்ற அறிக்கையின் படி, 365 நாட்களில் 318 நாட்கள் தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் வெப்ப அலைகளின் தாக்கம் தீவிரமடைந்துள்ளன. எனவே, வெப்ப அலைகளை மாநில பேரிடராக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இது முன்னெச்சரிக்கை மற்றும் விரைவான நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்ள உதவும்.

மேலும், தீவிர மழைப்பொழிவு நிகழ்வுகளால், திடீர் வெள்ளப்பெருக்கு நம் மாநிலத்தில் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் உட்கட்டமைப்புகள் பாதிக்கப்படுகிறது. எனவே காலநிலை மாற்றத்திற்கு ஏற்ற மீள்தன்மை நடவடிக்கைதேவை. இந்த சவால்கள் காலநிலை நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்லத் திறன்பெற்ற பங்குதாரர்களின் அவசியத்தை உணர்த்துகிறது,’’ என்றார்.