சிவகாசி: ‘செத்தாலும் சாவேன். அதிமுகவை காட்டிக் கொடுக்கவே மாட்டேன்’ என முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கதறி அழுதபடி பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. விருதுநகர் மாவட்டத்தில் ஆக. 8ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மேற்கொள்ளவுள்ள பிரசாரப் பயணம் தொடர்பான ஆலோசனை கூட்டம் சிவகாசியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைமை வகித்து முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி பேசியதாவது: பணமோசடி வழக்கில் என்னை கைது செய்து சிறையில் அடைத்தார்கள். அதிமுகவிற்கு எதிராக காவல்துறை உயரதிகாரிகள் பிரமாண பத்திரத்தில் கையெழுத்துப் போட்டுத் தரச் சொல்லி மிரட்டினர். தனிமைச் சிறையில் அடைத்து, மிரட்டி பணிய வைக்க நினைத்தார்கள். ஆனால் நான் எதற்கும் கட்டுப்படவில்லை. செத்தாலும் சாவேன்... (அப்போது அவர் கண்ணீர் சிந்தியபடி பேசினார்) அதிமுகவை காட்டிக் கொடுக்கவே மாட்டேன்.
ராஜபாளையம் தொகுதியில் என்னை சதி செய்து தோற்கடித்தனர். எந்த சாதிக்கும், மதத்துக்கும் நான் எதிரானவன் அல்ல. அனைத்து சமூக மக்களும் என்னிடம் உறவுமுறையோடுதான் பழகுகின்றனர். என்னை பற்றி சமூக வலைதளங்களில் வரும் உண்மைக்கு புறம்பான தகவல்களை யாரும் நம்ப வேண்டாம். பாஜ.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டாலும் சிறுபான்மை மக்கள் பல ஆயிரம் பேர் என் மீது நம்பிக்கை கொண்டு உள்ளனர். அவர்கள் நம்பிக்கையை நான் காப்பாற்றுவேன். இவ்வாறு அவர் பேசினார்.