Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

சாலை, தெருக்களில் சுற்றித் திரியும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு அபராதம் ரூ.15 ஆயிரமாக உயர்வு: மாநகராட்சி கூட்டத்தில் தீர்மானம்

சென்னை: சென்னை மாநகராட்சி மாமன்ற கூட்டம், மேயர் பிரியா தலைமையில், ரிப்பன் மாளிகையில் உள்ள கூட்ட அரங்கில் நேற்று நடந்தது. துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் குமரகுருபரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டம் தொடங்கியதும், முன்னாள் கவுன்சிலரும், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவருமான ஆம்ஸ்ட்ராங் மரணத்திற்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

தொடர்ந்து, மாநகராட்சி கூட்டத்தில் 72 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அதன் விவரம் வருமாறு: தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு சட்டம் 1998 பிரிவு 1/7 ஏ-1 மற்றும் தமிழ்நாடு நகர்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகள் 2023 பிரிவுகள் 274-288ல் தொழில் வரி நிர்ணயம் செய்யவும் மற்றும் வசூல் செய்யவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தொழில் வரி விகிதம் திருத்தி அமைக்கலாம் எனவும், அத்தகைய திருத்தம் 25 சதவீதத்திற்கும் குறைவில்லாத வகையிலும், 35 சதவீதத்திற்கும் மிகாமலும் இருக்க வேண்டும். தொழில் வரி விதிகம் ரூ.2,500க்கு மிகாமல் இருக்க வேண்டும் என விதிகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், சென்னை மாநகராட்சியில் கடந்த 2018ம் ஆண்டு வரி உயர்த்தப்பட்டது. தற்போது உள்ள அட்டவணை தொகையில் 35 சதவீதம் தொழில்வரியை உயர்த்துவதற்கு தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. 6 மாத கால நிகர வருமான வகைகளில் மாத வருமானம் ரூ.21 ஆயிரத்துக்குள் உள்ள நபர்களுக்கு வரி உயர்வு இல்லை. ரூ.21 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை வருமானம் உள்ள நபர்களுக்கு வரி ரூ.135ல் இருந்து ரூ.180 ஆகவும், ரூ.30 ஆயிரம் முதல் ரூ.45 ஆயிரம் வரை வருமானம் உள்ள நபர்களுக்கு ரூ.315ல் இருந்து ரூ.430ஆகவும், ரூ.45 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை உள்ள நபர்களுக்கு ரூ.690ல் இருந்து ரூ.930 ஆகவும் உயர்த்தப்படுகிறது.

இந்த வரியை 6 மாதத்திற்கு ஒரு முறை செலுத்த வேண்டும். மேலும் தொழில் வரி விகிதத்தை திருத்துவது குறித்து மாநகராட்சியின் பரிந்துரைகளை அங்கீகரிக்க தமிழ்நாடு முழுவதும் ஒரே சீராக தொழில்வரி நிர்ணயம் செய்ய அரசுக்கு முன்மொழிவினை அனுப்பப்படும். சாலையில் மாடுகள் சுற்றித்திரிவதால் விபத்து ஏற்படுகிறது. எனவே, சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை கட்டுப்படுத்த தவறும் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் ரூ.5 ஆயிரம் அபராதத்தை, ரூ.15 ஆயிரம் வரை உயர்த்தப்படுகிறது.

அதன்படி, சாலைகளில், தெருக்களில் மாடு முதல்முறையாக பிடிக்கப்பட்டால் அதன் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதமும், மீண்டும் பிடிக்கப்பட்டால் ரூ.15 ஆயிரம் அபராதமாகவும் வசூலிக்கப்பட உள்ளது. மேலும், பராமரிப்பு செலவுக்கும் 3ம் நாளில் இருந்து, நாள் ஒன்றிக்கு ரூ.1000 கூடுதலாக வசூலிக்கப்பட உள்ளது. சென்னையில், இந்த ஆண்டில் ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 1,425 மாடுகள் பிடிக்கப்பட்டு, ரூ.59 லட்சத்து 8 ஆயிரம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள், மாநகராட்சியிடம் பதிவு செய்வதும், உரிமம் பெறுவதும் கட்டாயமாகும்.

அவ்வாறு பதிவு செய்பவர்கள், மாநகராட்சிக்கு பதிவுக் கட்டணம் மற்றும் புதுப்பித்தலுக்கான கட்டணம் செலுத்த வேண்டும். இந்நிலையில், தொழில் நிறுவனங்களுக்கான உரிமம் பெறும் கட்டணத்தை மாநகராட்சி மாற்றியமைத்து உள்ளது. வணிக தன்மைக்கு ஏற்ப இந்த புதிய கட்டணம் மாற்றி அமைக்கப்படும். அதன்படி, ரூ.500ஆக இருந்த தொழில் உரிம கட்டணம், மிகச்சிறிய வணிகத்திற்கு ரூ.3,500, சிறிய வணிகத்திற்கு ரூ.7,000, நடுத்தர வணிகத்திற்கு ரூ.10,000, பெரிய வணிகத்திற்கு ரூ.15,000 என்ற அளவில் உயர்த்தப்பட்டு உள்ளது. பேக்கரி, மருந்து கடை, முடி திருத்த கடைகளுக்கு ரூ.10 ஆயிரம் வரையும், துணிக்கடைகளுக்கு ரூ.15,000 வரையும், சினிமா ஸ்டுடியோ, நகைக்கடைகளுக்கு ரூ.20 ஆயிரம் வரையும் திருமண மண்டபங்களுக்கு ரூ.30,000 வரையும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

* அம்மா உணவகங்களுக்கு ரூ.7.6 கோடி நிதி ஒதுக்கீடு

சென்னையில் உள்ள அம்மா உணவகத்தை சமீபத்தில் ஆய்வு செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்த ரூ.21 கோடி ஒதுக்கீடு செய்தார். அதன் அடிப்படையில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களில் பயன்படுத்தப்படும் பாத்திரங்கள் மற்றும் உபகரணங்களை ஆய்வு செய்ததில் 23 ஆயிரத்து 848 பாத்திரம் மற்றும் இயந்திரங்கள் பயன்படுத்த முடியாத ஒரு சூழலில் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது. இந்த பொருட்கள் மற்றும் இயந்திரங்களை மாற்ற ரூ.7 கோடியே 6 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

* வாகன நிறுத்த கட்டணம் வசூல் செய்ய முன்னாள் படைவீரர்களுக்கு அனுமதி

சென்னையில் சாலையோரம் வாகன நிறுத்தத்தில் கட்டணம் வசூல் செய்ய தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட ஒப்பந்தம் முடிவடைந்த நிலையில், பார்க்கிங் கட்டணம் வசூல் மேற்கொள்ள தமிழ்நாடு முன்னாள் படைவீரர் கழகத்திற்கு அனுமதி வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியுடன் 70:30 விகிதத்தின் அடிப்படையில் டெக்சோ நிறுவனத்திற்கு ஒப்பந்தம் பார்க்கிங் வருவாயில் 70 சதவீதம் சென்னை மாநகராட்சிக்கும், 30 சதவீதம் டெக்சோ நிறுவனத்திற்கும் வழங்கும் வகையில் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், சென்னையில் உள்ள 47 வாகன நிறுத்த இடங்களிலும் இரு சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.5ம், 4 சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.20ம், பிரீமியம் ஏரியாவில் (பாண்டி பஜார் சாலை) இரு சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.20ம், 4 சக்கர வாகனத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.50 என வசூலிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. டெக்சோ நிறுவனம் வசூல் பணி தொடரும் வரை சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட அனைத்து வாகன நிறுத்துமிடங்களிலும் பொதுமக்கள் கட்டணமின்றி இலவசமாக வாகனங்கள் நிறுத்தவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.