Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

இதமான வாழ்வைத் தரும் ரத சப்தமி பூஜை

நம்முடைய வழிபாட்டில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு சிறப்புண்டு. அதில் சப்தமி என்கிற திதிக்கு ஒரு சிறப்புண்டு. அது வரும் 16 -ஆம் தேதி வருகின்றது.அந்த நாளுக்கு என்ன ஏற்றம்? அந்த நாளில் நாம் என்ன செய்ய வேண்டும்? அப்படி அந்த நாளில் இந்த காரியத்தை செய்தால் நமக்கு என்ன நன்மை ஏற்படும்? என்பதைத் தெரிந்து கொள்வதற்கு இந்த தொகுப்பு. நவகிரகங்களில் சூரியன்தான் தலைமை கிரகம் என்று சொல்லுவார்கள். சூரிய வழிபாடு தொன்மையான வழிபாடு. அதன் பழமை சீனா, எகிப்து மற்றும் மெசப்படோமியா போன்ற உலகின் பல பகுதிகளில் புராணங்களுடன் தொடர்புடையது. காயத்ரி மந்திரம் என்பது சூரியக் கடவுள் அருள் மீது ஓதப்படும் மந்திரம் ஆகும். சூரிய வழிபாடு ஆதிகால வழிபாடாகத் தோன்றியது. பழமையான வேதமான ருக் வேதத்தில் சூரிய தேவன் மனைவியு டன் தேரில் அமர்ந்திருந்ததாக குறிப்புகள் உள்ளது. மற்ற எல்லா கிரகங்களுக்கும் ஒளி கொடுக்கக்கூடியது சூரியன். அது நட்சத்திரம்தான் என்றாலும், நம்முடைய இந்து ஜோதிட மரபில் அதனை ஒரு கிரகம் ஆகவே கருதுகிறார்கள். சூரியன் இல்லாவிட்டால், இந்த பூமிக்கு ஒளி இல்லை. உயிர் இல்லை. வாழ்க்கை இல்லை.

உயிர்களுக்கு மட்டுமல்ல, பயிர்களுக்கும் சூரிய ஒளியே முக்கியம். அந்த சூரியனுடைய ஜெயந்தி நாள்தான், 16-ஆம் தேதி வருகின்ற ரதசப்தமி. அன்றைக்கு விடியற்காலை ஐந்து முப்பது மணியிலிருந்து 7 மணிக்குள் நாம் நீராட வேண்டும். அப்படி நீராடுவதற்கு முன் எருக்க இலைகள், இதனை வடமொழியில் ``அர்க்க பத்ரம்’’ என்று சொல்லுவார்கள். அந்த இலைகளில் ஏழு இலைகள் எடுத்து தலையில் வைத்துக் கொண்டு, பெண்களாக இருந்தால் கொஞ்சம் மஞ்சளை அந்த இலைமேல் வைத்துக் கொள்ள வேண்டும். ஆண்களாக இருந்தால், மங்களகரமான அட்சதையை வைத்துக் கொள்ளவேண்டும். தலையில் ஏழு இலைகளை வைத்துக் கொண்டு கிழக்கு நோக்கி நின்று சூரியனை தியானம் செய்து, ஆற்றிலோ, குளத்திலோ அல்லது கிணற்றடியிலோ அல்லது வேறு வழி இல்லாவிட்டால், நம்முடைய குளியல் அறையிலோ ஏழு முறை முங்கிக் குளிக்க வேண்டும் அல்லது ஏழு முறை தண்ணீரை தலையில் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு முறை குளத்தில் மூழ்கும் போதும் அல்லது தலையில் தண்ணீரை ஊற்றும் போதும், ``ஓம் சூர்யாய நமஹ’’ அல்லது தமிழில் ``ஓம் சூரிய தேவா போற்றி’’ என்று சொல்லி நீராட வேண்டும். இதன் மூலமாக நாம் செய்த வினைகளும், தெரியாமல் செய்த பாவங்களும் தீரும். நம்முடைய குடும்பத்தில் தடைபட்ட மங்களகரமான காரியங்கள் நிறைவேறும். மகாபாரதத்தில், பீஷ்மர் கடைசி காலத்தில் அம்பு படுக்கையில் 58 நாள்கள் துன்பத்தில் தவித்த பொழுது வேதவியாசர் அவருடைய உடலின் மீது இந்த ஏழு எருக்கம் இலைகள் மற்றும் அதனுடன் அட்சதைகளையும் சப்தமி நாளன்று போட்டு சூரியனை பிரார்த்திக்க சொல்ல, பீஷ்மரின் துன்பத்தை சூரிய பகவான் நீக்கினான் என்பது  வரலாறு.

அதுமட்டுமின்றி, இதற்கு அடுத்த நாள் பீஷ்மரை நினைத்து ஆற்றங்கரையிலும், கடற்கரையிலும் தர்ப்பணம் செய்தால், ``பித்ரு சாபங்கள்’’ நீங்கும். நோய் நொடிகள் அகலும். கிரக தோஷங்கள் விலகும். காலையில் நீராடியவுடன் வீட்டின் வெளியிலோ அல்லது முற்றத்திலோ ஒரு தேர் போல கோலம் போட்டு, நடுவில் அகல் விளக்கை, குத்துவிளக்கை ஏற்றி வைத்து, பால் பழமோ அல்லது சூரிய பகவானுக்கு மிகவும் பிடித்த சர்க்கரைப் பொங்கலோ வைத்து படைக்க வேண்டும். குத்துவிளக்கை ஏற்றி வைத்துவிட்டு, சூரியனை நோக்கி கைகுவித்து இந்த பாடலை பாடுங்கள்.

``கதிரவன் குணதிசைச் சிகரம் வந்து அணைந்தான்

கனை இருள் அகன்றது காலையம் பொழுதாய்

மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்

வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி

எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த

இருங் களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும்

அதிர்தலில் அலை கடல் போன்றுளது எங்கும்

அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே’’

இதற்குப் பிறகு கையில் கொஞ்சம் புஷ்பங்களை வைத்துக் கொண்டு இந்த தமிழ் மந்திரங்களைச் சொல்லுங்கள்.

ஓம் சூரியநாராயண பரப்பிரம்மமே போற்றி.

ஓம் சுந்தர திருவுடைய சுடர் ஒளியே போற்றி.

ஓம் ஆவியைக் காக்கும் அரும் பொருளே போற்றி.

ஓம் அனைத்து உயிரை அரவணைக்கும் அன்னையே போற்றி.

ஓம் பாவங்கள் தீர்த்து நலம் தருபவரே போற்றி.

ஓம் பல்லுயிர்க்கும் நல் உயிராய் பரந்தவனே போற்றி.

ஓம் தீபமாய் வழிகாட்டும் திரு மறையே போற்றி.

ஓம் செழுஞ்சுடரே இருளகற்றும் தெய்வமே போற்றி.. போற்றி.

இதற்கு பிறகு தீப ஆரத்தி காண்பித்து நிவேதனம் செய்த பிறகு, மறுபடியும் கொஞ்சம் நீரையும் புஷ்பத்தையும் எடுத்து இரண்டு கைகளிலும் வைத்துக் கொண்டு இந்த பாடலை பாடி பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

நவகோள்களின் நாயகனே

நல் இதயம் கொண்டவனே

பவ வினைகள் தீர்ந்திடவே

பதமலரை பணிந்தோமே

ரத சப்தமி நன்னாளில்

ரவி உன்னைப் போற்றுகிறோம்

குலம் செழிக்க அருள்வாயே

குறை தீர்க்க வருவாயே

ஓம் சூர்யாய நமஹா

- என்று ஏழு முறை சொல்லி பூஜையை முடிக்கவும். 

ஜெயசெல்வி