சென்னை: கமல்ஹாசன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: ராஜ்யசபா உறுப்பினராக உறுதிமொழி ஏற்றபோது, பணிவுடனும், மனசாட்சி நிறைந்த இதயத்துடனும் அதை செய்தேன். கவிஞர்கள், புரட்சியாளர்கள், சிந்தனையாளர்கள் மற்றும் சீர்திருத்தவாதிகள், நீதி, கண்ணியம் மற்றும் சுயமரியாதையில் ஆழமாக நம்பிக்கை கொண்ட குடிமக்களை உருவாக்கிய தமிழ்நாட்டுடன் இதைப் பகிர்ந்து கொள்கிறேன்.
காந்தியின் கனவுகள், அம்பேத்கரின் அறிவுத்திறன் மற்றும் பெரியாரின் நம்பிக்கை ஆகியவற்றை முன்னெடுத்து செல்கிறேன். நாடாளுமன்றத்திற்கு நான் வெறும் விமர்சகராக மட்டும் வரவில்லை, மாறாக எதிர்க்க வேண்டிய இடத்தில், பகுத்தறிவுடன் செயல்படுவேன், ஆதரிக்க வேண்டிய இடத்தில் உறுதியுடன் செய்வேன், ஆலோசனை வழங்க வேண்டிய இடத்தில் ஆக்கப்பூர்வ யோசனையை வழங்குவேன். காந்தியின் அகிம்சை, அம்பேத்கரின் அரசியலமைப்புவாதம், நேருவின் பன்மைத்துவம், வல்லபாய் பட்டேலின் நடைமுறைவாதம் மற்றும் பெரியாரின் பகுத்தறிவு அனைத்தும் ஒருசேர நமது நாட்டை பிரிவினைவாதத்தின் ஆபத்துகளிலிருந்து மீட்க வேண்டும். இவ்வாறு கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.