Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குமரியில் மழையால் உடைந்த குற்றியாறு தற்காலிக பாலம் சீரமைக்கும் பணி தீவிரம் 2வது நாளாக மலைக்கிராமங்கள் துண்டிப்பு

*திற்பரப்பு அருவியில் குளிக்க 5வது நாளாக தடை

குலசேகரம் : குமரி மலைப்பகுதிகளில் பெய்த கனமழையால் குற்றியாறு - மோதிரமலை சாலையில் உள்ள தற்காலிக தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் 2 வது நாளாக மலைகிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.குமரி மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மலைப்பகுதிகளில் தொடர்ச்சியாக பெய்த மழை காரணமாக அணைகளுக்கான நீர்வரத்து அதிகரித்தது. இந்நிலையில் 20ம் தேதி நள்ளிரவு முதல் குமரி மலையோர பகுதிகளில் மழை வெளுத்து வாங்கியது. சூறைக்காற்றும் வீசியது.

கன மழை காரணமாக மலையோர பகுதிகளில் உள்ள நீரோடைகளில் வெள்ளம் பெருக்கெடுத்தது. குறிப்பாக கோதையாறு, குற்றியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்தது. இந்த மழையால் மோதிரமலை, மாங்கா மலை, முடவன் தூக்கி, தச்சமலை உள்ளிட்ட மலையோர கிராமங்கள் அடியோடு முடங்கிப் போயின. இந்நிலையில் குற்றியாறு - மோதிரமலை சாலையில் உள்ள தரைப்பாலம் வெள்ளத்தில் மூழ்கியது. இப்பகுதியில் உயர் மட்ட பாலம் அமைக்கப்படுவதால், பொதுமக்கள் போக்குவரத்துக்காக தற்காலிக பாலம் அமைத்திருந்தனர். இந்த தற்காலிக பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

மழை வெள்ளம் காரணமாக நேற்று 2வது நாளாக குற்றியாறு, கிளவியாறு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த மலை கிராமங்கள் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. கோதையாற்றில் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் திற்பரப்பு அருவி பலத்த சத்தத்துடன் வெள்ளக்காடாக மாறி ஆர்ப்பரித்து கொட்டுகிறது. 5வது நாளாக நேற்றும் திற்பரப்பு அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.தற்காலிக பாலம் அமைக்கும் பணிகலெக்டர் அழகுமீனா கூறியதாவது:

மோதிரமலை - குற்றியாறு சாலையானது மின்வாரியத்திற்கு சொந்தமான பேச்சிப்பாறையில் இருந்து கோதையாறு செல்லும் சுமார் 15 கி.மீ நீள சாலையில் இடதுபுறம் பிரிந்து செல்லும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மாவட்ட இதர சாலையாகும். முற்றிலும் வனப்பகுதிக்குள் உள்ள இச்சாலையின் இடதுபுறம், கோதையாறு இரண்டாவது மின்நிலையம் அமைந்துள்ளது. அரசு ரப்பர் கழகம், தமிழ் நாடு மின் உற்பத்தி கழக அலுவலர்கள் மற்றும் முடவன்பொத்தை, மாங்காமலை, விளாமலை, தச்சன்மலை ஆகிய பகுதிகளில் வசிக்கும் பழங்குடியின மக்கள் இச்சாலையை பயன்படுத்துகின்றனர்.

வனப்பகுதிக்குள் ஏற்கனவே இருந்த தரைப்பாலம் சேதமடைந்துவிட்டதாலும் மழைக்காலங்களில் வெள்ளம் வடிய ஒரு வார காலத்திற்கு மேல் ஆவதாலும் இங்கு உயர்மட்ட பாலம் அமைக்க ரூ.5 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் கோரப்பட்டு வனத்துறை அனுமதியுடன் பணிகள் நடந்து வருகிறது.இந்நிலையில் மக்கள் ஆற்றை கடக்க அமைக்கப்பட்டிருந்த தற்காலிக மாற்றுப்பாலம் ஆக.21 பெய்த கனமழையினால் அடித்து செல்லப்பட்டது. எனவே பொதுமக்கள் நலன் கருதி உடனடியாக மாற்றுப்பலம் அமைக்க உத்தரவிடப்பட்டது.

அதனடிப்படையில் நெடுஞ்சாலை துறையினரால் சேதமடைந்த மாற்றுப்பாதை மற்றும் தற்காலிக பாலத்தை சரி செய்யும் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. அதில் அடித்துச்செல்லப்பட்ட குழாய்களுக்கு பதிலாக புதிய குழாய்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. இப்பணியினை (நாளை) 24ம் தேதி க்குள் முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

குழித்துறை சப்பாத்து மூழ்கியது

மார்த்தாண்டம்: கடந்த சில தினங்களாக குமரி மலை கிராமங்களான பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, கோதையாறு, சிற்றாறு, கல்லாறு ஒருநூறாம் வயல், கடையாலுமோடு, பேணு, ஆறுகாணி, பத்துகாணி உள்ளிட்ட பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து தாமிரபரணி ஆற்றில் வெள்ளம் அதிகரித்து வருகிறது. தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம் குழித்துறை சப்பாத்து பாலத்தை மூழ்கடித்து செல்கிறது.

இதனால் பாலத்தின் வழியாக பொதுமக்கள் கடந்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் நேற்றும் மழை நீடித்ததால் ஆறுகளில் வெள்ளம் அதிகரிக்கும் என பொதுப்பணித் துறையினர் தெரிவித்துள்ளனர். எனவே ஆறுகளின் அருகே செல்ல வேண்டாம் எனவும், பொதுமக்கள் கவனமுடன் இருக்கவும் அறிவுறுத்தி உள்ளனர்.

திரும்பி வரமுடியாமல் நிற்கும் அரசு பஸ்

வெள்ளப்பெருக்கு காரணமாக குற்றியாறு சென்ற அரசு பஸ் மீண்டும் திரும்பி வரமுடியாமல் அங்கேயே நிற்கிறது. நேற்று முன்தினம் மதியத்துக்கு மேல் காட்டாற்று வெள்ளம் சற்று தணிந்ததை அடுத்து, அடித்து செல்லப்பட்ட தற்காலிக பாலத்தின் ஒரு பகுதி வழியாக பொதுமக்கள் மெதுவாக நடந்து சென்று வருகின்றனர். இந்த வழியாக பஸ்சில் இருந்த டிரைவர் மற்றும் கண்டக்டர் திரும்பி வந்துள்ளனர். பஸ் மட்டும் தனியாக நிறுத்தப்பட்டு உள்ளதால் அதன் பாதுகாப்புக்காக டிரைவர் ஒருவரை அனுப்பி வைத்துள்ளது போக்குவரத்து கழகம். வெள்ளம் வரத்து தணிந்ததும் தற்காலிக பாலம் சீரமைக்கப்பட்ட பிறகுதான் பஸ்சை எடுத்து வர முடியும்.