பெரம்பூர்: சென்னை வியாசர்பாடி பி.வி.காலனி பகுதியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி (40). இவர் மணல், ஜல்லி கடை நடத்தி வருகிறார். நேற்றுமுன்தினம் மாலை பி.வி.காலனி 29வது தெருவில் தனது ஆட்டோவை நிறுத்தி வைத்திருந்தார். அப்போது குடிபோதையில் கூட்செட் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (23) என்பவர் ஆட்டோ கண்ணாடியை உடைத்துவிட்டு ஆரோக்கியசாமிக்கு கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளார். இதுபற்றி ஆரோக்கியசாமி கொடுத்த புகாரின்படி, எம்கேபி.நகர் போலீசார் வழக்குபதிவு செய்து பிரவீன் குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கொடுங்கையூர் லட்சுமிஅம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (37). இவர் நேற்றுமுன்தினம் கொடுங்கையூர் மணலி சாலை திருவள்ளுவர் சாலை சந்திப்பில் நின்றிருந்தபோது குடிபோதையில் தகராறில் ஈடுபட்ட ரவுடி ஒருவர் கண்ணாடியால் சீனிவாசனை குத்தியதில் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து புகாரின்படி, கொடுங்கையூர் போலீசார் விசாரணை நடத்தி ரவுடி அரவிந்த்தை (28) கைது செய்தனர்.
புளியந்தோப்பு திக்காகுளம் பகுதியை சேர்ந்தவர் பிரேம் (24). இவர் வங்கியில் பணியாற்றுகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு பைக்கில் சென்றபோது 2 பேர் மறித்து கத்தியால் பிரேம் தலையில் வெட்டிவிட்டு தப்பினர். இதில் காயம் அடைந்த பிரேம், ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றார்.இதுகுறித்து புளியந்தோப்பு போலீசார் வழக்குபதிவு செய்து பட்டாளம் தேவராஜ் தெருவை சேர்ந்த மகேஷை (19) கைது செய்தனர். ஒருவரை தேடி வருகின்றனர்.


