கந்தர்வகோட்டை, நவ.26: கந்தர்வகோட்டையில் பிசானத்தூர் கிராம த்தில் மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதற்கு எதிராக வர்த்தக சங்கத்தினர் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. கந்தர்வகோட்டை அருகே பிசானத்தூரில் மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதை எதிர்த்து கந்தர்வகோட்டை வர்த்தக சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை நேற்று கடையடைப்பு செய்து ஆதரவு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வகோட்டை ஒன்றியம், பிசானத்தூர் கிராமத்தில் உயிரி மருத்துவக் கழிவு ஆலை அமைப்பதை கண்டித்து கிராம மக்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்களுக்காகவும் மருத்துவக் கழிவு ஆலையை எதிர்த்தும் கந்தர்வகோட்டை வர்த்தக சங்கத்தினர் தங்களது கடைகளை முற்றிலுமாக அடைத்து ஆதரவு தெரிவித்தனர்.
கந்தர்வகோட்டையில் உள்ள அத்தியாவசிய கடைகளான காய்கறி, பழங்கள், மளிகை உணவகம் தேநீர் கடை உள்ளிட்ட சிறு கடைகள் முதல் அனைத்து கடைகளையும் தன்னார்வமாக கடையடைப்பு செய்து வர்த்தக சங்கத்தினர் பிசானத்தூர் கிராம பொதுமக்களுக்கு ஆதரவாக கடை அடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த மாபெரும் கடையடைப்பு போராட்டத்தால் கந்தர்வகோட்டை பகுதி ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இந்த போராட்டத்தில் அனைத்து ஆட்டோ ஒட்டுனர் சங்கம் கலந்துகொண்டு காலை 6 மணி முதல் மாலை 6 வரை ஆட்டோக்களை இயக்கவில்லை என்பது குறிப்பிடதக்கது.

