Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

குடும்ப பிரச்னையை காரணம் காட்டி பேராசிரியரை பணியிடை நீக்கம் செய்தது செல்லாது: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக பேராசிரியராக பணியாற்றி வந்த திருநாவுக்கரசு, கடந்த 2023 ஏப்ரல் 30ம் தேதி பணி ஓய்வு பெற இருந்தார். இந்நிலையில் அவரது மருமகள் அளித்த வரதட்சணை கொடுமை புகாரின் அடிப்படையில், பேராசிரியர் திருநாவுக்கரசு, அவரது மகன் உள்ளிட்டோருக்கு எதிராக செம்பியம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கை காரணம் காட்டி, பேராசிரியர் திருநாவுக்கரசுக்கு எதிராக குற்ற குறிப்பாணை பிறப்பித்த பல்கலைக்கழகம், அவரை பணியிடை நீக்கம் செய்து ஓய்வு பெறுவதற்கு 4 நாட்களுக்கு முன்பு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து பேராசிரியர் திருநாவுக்கரசு தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, குடும்ப பிரச்னை தொடர்பான வழக்கை காரணம் காட்டி பணியிடை நீக்கம் செய்ய முடியாது எனக் கூறி, பணியிடை நீக்க உத்தரவை ரத்து செய்ததுடன் அவரைப் பணி ஓய்வு அனுமதிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து பல்கலைக்கழகத்தின் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், பொதுநலன் சார்ந்திருந்தால் மட்டுமே பணியிடை நீக்கம் செய்ய முடியும் என்று பல்கலைக்கழக விதிகளில் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குடும்ப பிரச்னை தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள மனுதாரரை பணியிடை நீக்கம் செய்வதில் என்ன பொதுநலன் உள்ளது என்பதை புரிந்துகொள்ள முடியவில்லை. எனவே, பல்கலைக்கழகத்தின் மேல்முறையீட்டு வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரருக்கு வழங்க வேண்டிய ஓய்வு கால பலன்களை 12 வாரங்களில் வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.