Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பூவும் பூசையும்...

இறைவனை முறையே வழிபடுவதற்குப் ‘பூசை’ என்று பெயர். பூவை வைத்து செய்யப்படுவதால் இது பூசை (பூ+செய்=பூசை) எனப்பட்டது. இதைப் ‘‘பூசனை” என்றும் குறிப்பிடுவர். இறைவனுக்குப் பூச்சூட்டுவதற்குக் காரணமுண்டு.உலகில் கெடாத ஒரே பொருள் தேன்; அத்தேனை என்றும் கெடாத நிலைத்த பொருளாகிய இறைவனுக்கு அர்ப்பணிக்க வேண்டும். தேனை எடுத்து அபிஷேகம் செய்து அர்ப்பணிப்பதைவிட, தேன் நிறைந்த பூக்களையே அர்ப்பணிக்கும் வழக்கம் உண்டானது. ஆகவே இறைவனுக்குச் சூட்டும் பூக்கள் தேன் நிறைந்ததாக இருக்க வேண்டும். அதற்கு விதிப்படி பூப்பறித்தல் அவசியமாகும். சூரிய ஒளி சுடர்விடும்முன் பூக்களைப் பறித்தல் வேண்டும். சூரியோதயம் ஆனவுடன் வண்டுகள் மலரிலிருக்கும் தேனை எடுத்துச் சென்றுவிடும். ‘‘வண்டு எச்சில்’’ என்றே தேனைக் குறிப்பிடுகிறார் அருணகிரிநாதர். ஆகவே, அதிகாலையிலேயே பூப்பறித்தல் மிக அவசியமாகிறது. பூக்கைங்கர்யம் செய்தே நாயனார் ஆன முருக நாயனார் என்பவர், அதிகாலையில் எழுந்து பூப்பறித்த வரலாற்றை, தெய்வச் சேக்கிழார் தேனொழுக,

‘‘புலரும் பொழுதின் முன்னெழுந்து, புனிதநீரில் மூழ்கிப் போய்,

மலரும் செவ்வித் தம்பெருமான் முடிமேல், வானீராறு மதி

உலவு மருங்கு முருகுயிர்க்க, நகைக்கும் பதத்தினுடன் பறித்த,

அலகின் மலர்கள் வெவ்வேறு திருப்பூங்கூடையில் அமைப்பார்”

என்று கூறும்போது, முருக நாயனார் பொழுது புலர்வதற்கு முன்பே எழுந்து நீராடி (தலை மூழ்குமாறு) பிறகு பூப்பறித்தார் என்கிறார். அதற்குக்காரணம், தான் பறிக்கின்ற மலர்கள் யாவும் புனிதமான கங்கையாறும், குளிர்ச்சி பொருந்திய நிலவும் அணிசெய்யும் இறைவனின் முடிமணியில் ஏறப்போகின்றன. என்று கருதி முதலில் தன்னைத் தூய்மையாக்கிக்கொண்டு பிறகு பூப்பறித்தார் எனலாம்.அதுவும், அழகாகச் சிரிக்கும் பதத்திலுள்ள பூக்களைத்தான் பறித்தார். (இறைவன் திருமுடியை அலங்கரிக்கப்போகும் பேறு நமக்குக் கிடைக்கப் போகிறதே என்றும், இறைவனின் முடிமேல் அமர்வதால் நமக்கு இன்னும் அழகு கூடப்போகிறதே என்றும் அம்மலர்கள் சிரிக்கின்றன). மொட்டு, முகை, போன்ற பருவத்திலுள்ள மலர்களைப் பறிக்கக் கூடாது என்பதை ‘புட்பவிதி’ என்ற நூல் எடுத்தியம்புகிறது. அவ்வாறு மொட்டுக்களையும் முகைகளையும் பறித்தால் அடுத்தடுத்த நாள் வழிபாடுகள் தடைப்படுமல்லவா. அதனால், மலரும் பருவத்திலுள்ள பூக்களையே முருகர் பறித்தார்.

அப்படிப் பறித்த பூக்களையும் அவர் ஒரே பூக்கூடையில் சேகரிக்காமல் ஒவ்வொரு இனப்பூக்களையும் தனித்தனியே ஒவ்வொரு கூடைகளில் சேகரித்தார். அதற்குக் காரணம், எல்லாப் பூக்களும் ஒரே எடையோ, வலிமையோ கொண்டவையல்ல. பலவகை மலர்கள் சேரும்போது வலிமையான மலர்களால் மென்மையான மலர்கள் பாதிக்கப்படும். அதனால் அவற்றின் மனமும் தேனும் வீணாகும். மேலும், அவை தொடுக்க முடியாத நிலையை அடையும். ஆகவே, தனித்தனியான கூடைகளில் பூக்களைச் சேகரித்தலே சரி.பூக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகை. அவை பூக்கின்ற இடத்தை வைத்து நான்கு வகைப்படும். அவை, கோட்டுப்பூ, நிலப்பூ, நீர்ப்பூ, கொடிப்பூ ஆகியவையாகும். இதனை, ‘‘கோட்டு மலரும், நிலமலரும், குளிர்நீர் மலரும், கொழுங்கொடியின் தோட்டு மலரும்” என்கிறது பெரிய புராணம்.

கோட்டுப்பூ என்றால் கொம்புகளில் பூக்கும் கொன்றை, மந்தாரம், சண்பகம் போன்றவை. நிலப்பூ என்பவை கொடியும், நீரும், கொம்பும் அல்லாமல் செடியில் பூக்கும் அலரி, நத்தியாவட்டம் போன்ற பூக்களாகும். நீர்ப்பூ என்பது நீரில் பூக்கும் தாமரை, அல்லி போன்றவை. கொடிப்பூ என்பவை கொடியில் பூக்கும் மல்லிகை, முல்லை உள்ளிட்ட பூக்கள். இத்தகைய இனிய பூக்களை ஆண்டவன் மீதும் ஆலயங்கள் முழுவதிலும் நிரப்பி வைப்பதில் ஓர் அறிவியல் காரணமுமுண்டு. பூக்கள் புத்துணர்ச்சியின் அடையாளங்கள். அவை நம் அறிவையும் மனத்தையும் புத்துணர்வில் புகுத்துபவை. தம் வண்ணத்தால் கண்களையும், நறுமணத்தால் நாசியையும், ததும்பும் தேனால் வாயையும், தன்னைச் சூழ்ந்து வண்டுகளை ரீங்காரம் இடச்செய்து காதுகளையும் புத்துணர்வில் வைப்பவை பூக்கள்.

இந்தப் பூக்களை இறையாலயங்களில் நிரப்பும் போது, அங்கு சென்று வழிபடுவோர்க்கு பூக்களைப் போன்றே புதுமலர்ச்சி உண்டாகும். மறையோதும்போது கூட புத்துணர்வு தோன்ற வேண்டும் என்றே பூக்களை மொய்க்கும் வண்டுகளின் ரீங்காரமாகிய ‘‘ரீம்’’ என்ற ஒலியை உச்சரிப்பது வழக்கமாயிற்று.இந்தப் புத்துணர்வின் பொருட்டுத்தான் மனிதர்களும் மலர் சூடிக்கொண்டார்கள். அக்காலத்தில் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் மலர் சூடினார்கள். போருக்குச் செல்லும்போது தான் செய்யும் பசு கவர்தல், பசுமீட்டல், முதல் வெற்றியடைவது வரையிலான அனைத்துச் செயல்பாடுகளின் போதும் முறையே வெட்சி, கரந்தை, வஞ்சி, காஞ்சி, நொச்சி, உழிஞை, தும்பை, வாகை போன்ற பூக்களைச் சூடினர் என்கிறது புறப்பொருள் வெண்பாமாலை என்னும் நூல்.போரில் வென்றவனை ‘வெற்றிவாகை சூடினான்’ என்பர். ஆம், வெற்றி பெற்றதன் பின்னரே சூடுவது வாகையாகும். வழிபாடு தொடங்கி, வாழ்க்கை வரை பூக்களின் மணம் வீசியவாறே இருக்கிறது.