Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

பெரம்பூர், ராயபுரம், துறைமுகம், கொளத்தூரில் ரூ.8 கோடியில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள்: டெண்டர் வெளியீடு

சென்னை: பெரம்பூர், ராயபுரம், துறைமுகம், கொளத்தூரில் ரூ.8 கோடியில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்க சிஎம்டிஏ டெண்டர் கோரியுள்ளது.

தமிழ்நாட்டில் சென்னை போன்ற பெருநகரங்களில் உள்ள முக்கியமான போக்குவரத்து முனையங்கள், குறிப்பாக சென்டரல், எழும்பூர் போன்ற ரயில் நிலையங்களில் பயணிகள் வசதிக்காக குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அரைகள் உள்ளன. இதுபோல கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் குளிரூட்டப்பட்ட காத்திருப்பு அரைகள் உள்ளன. ஆனால் நகரங்களில் பேருந்துகளுக்கு காத்திருப்பவர்களுக்கு பேருந்து நிறுத்தங்களில் நிழற்குடைகள் உள்ளன. இவை வெயில் மற்றும் மழையில் இருந்து பாதுகாக்க உதவுகின்றன. ஆனால் வெயில் காலங்களில் நிழற்குடைகளிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பயணிகள் அவதி அடைகின்றனர்.

இந்நிலையில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகளுக்காக வட சென்னையில் சில இடங்களில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்கப்படவுள்ளது. சென்னையின் அனைத்து பகுதிகளும் சம அளவில் வளர்ச்சி அடைய வேண்டும் என்ற நோக்கில் வடசென்னை பகுதிகளுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. வட சென்னையை வளர்ச்சி அடைந்த பகுதிகளாக மாற்றும் வகையில் பல்வேறு திட்டங்களை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது. முக்கியமாக வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் பெரம்பூர், மாதவரம், திருவொற்றியூர், ஆர்.கே.நகர், ராயபுரம், திருவிக நகர், துறைமுகம், எழும்பூர், வில்லிவாக்கம், கொளத்தூர் என மொத்தம் பத்து சட்டமன்ற தொகுதிகளை மேம்படுத்தும் விதமாக வட சென்னை வளர்ச்சி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

சுத்தமான குடிநீர், தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், வேலை வாய்ப்புகள் அதிகரிக்கப்பட வேண்டும், கல்வி, சுகாதாரம் வேலைவாய்ப்பு, சமூக கட்டமைப்பு, பொழுதுபோக்கு வசதிகள், பாதுகாப்பு வசதிகள் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் வட சென்னை வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரின்போது இத்திட்டத்திற்காக ரூ.6,858 கோடி ஒதுக்கப்பட்டது. வட சென்னை பகுதிகளில் பல்வேறு பேருந்து நிலையங்கள் நவீன முறையில் புனரமைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகளுக்காக வட சென்னையில் சில இடங்களில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்க முடிவெடுக்கப்பட்டது. நவீன இருக்கைகள், சார்ஜிங் பாயிண்டுகள் ஆகியவையும் இந்த பேருந்து நிறுத்தங்களில் அமைய உள்ளது.

வட சென்னையில் பெரம்பூர், ராயபுரம், கொளத்தூர், துறைமுகம் ஆகிய பகுதிகளில் ரூ.8 கோடி மதிப்பீட்டில் நான்கு குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தங்கள் அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் டெண்டர் கோரியுள்ளது. ம் தேதி முதல் 17ம் தேதி வரை டெண்டர் கோரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஏற்கெனவே தமிழ்நாட்டில் முதல்முறையாக ஆலந்தூரில் குளிரூட்டப்பட்ட பேருந்து நிறுத்தம் பரங்கிமலை, பல்லாவரம் கண்டோன்மண்ட் போர்ட் என்ற ராணுவ அமைப்பால் அமைக்கப்பட்டது, ஆனால் அதன் பராமரிப்பு பணி தனியார் நிறுவனத்திடம் வழங்கப்பட்டது. ஆனால் அது சரியான பராமரிப்பு இல்லாததால் அதனை பயன்படுத்த முடியாமல் போவதாக சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டினர். இந்நிலையில் இந்த திட்டம் எப்படி செயல்படுத்தப்படும், பராமரிப்பு பணிகள் குறித்து இன்னும் ஆலோசனைகள் மேற்கொள்ளப்படவில்லை, என அதிகாரிகள் தெரிவித்தனர்.