ஜெயங்கொண்டம், ஆக.4: ஜெயங்கொண்டம் அருகே ஜவுளிக்கடை உரிமையாளர் வீட்டில் 3 பவுன் நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே கரடிகுளம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் ஜெயங்கொண்டத்தில் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி ஆதிலட்சுமி (44). இவர் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டிற்கு சிமெண்ட் எடுப்பதற்காக தனது கடையில் வேலை செய்யும் வாழைக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த குமரகுருபரன் மகன் சூர்யா (24) என்பவரை அனுப்பியுள்ளார். சூர்யா சிமெண்ட் மூட்டையை எடுத்து வந்து போட்டுவிட்டு ஆதிலட்சுமி வீட்டில் ஆட்கள் யாரும் இல்லாததை தெரிந்து கொண்டு வீட்டிற்குள்ளே சென்று வீட்டின் பீரோவில் வைத்திருந்த 3 பவுன் நகையை திருடி சென்றுவிட்டார். இந்நிலையில் வீட்டிற்குச் சென்ற ஆதிலட்சுமி நகை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல்வேறு இடங்களில் தேடியும் நகை கிடைக்காத நிலையில் ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் சூர்யாவை பிடித்து விசாரித்ததில் அவர் நகையை திருடியதை ஒப்பு கொண்டதன் பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிந்து சூர்யாவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.