Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

கே.வி.குப்பம் பஸ் நிலையம் எதிரே அதிகாலை சென்டர் மீடியனில் மோதிய பெயின்ட் லாரி: சாலையில் பெயிண்ட் கொட்டியதால் வாகன ஓட்டிகள் அவதி

கே.வி.குப்பம்: கே.வி.குப்பம் பஸ் நிலையம் எதிரே சென்டர் மீடியனில் பெயிண்ட் ஏற்றி வந்த லாரி மோதி விபத்துக்குள்ளானது. இதில் பெயிண்ட் சாலையில் கொட்டியதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். பெங்களூருவில் இருந்து சுமார் ரூ.50 லட்சம் மதிப்புள்ள பெயிண்ட் டப்பாக்களை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி நள்ளிரவு கன்டெய்னர் லாரி சென்றது. லாரியை திருவண்ணாலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரை சேர்ந்த முருகன்(43) என்பவர் ஓட்டினார். இன்று அதிகாலை சுமார் 2 மணியளவில் வேலூர் மாவட்டம் குடியாத்தம்-காட்பாடி சாலையில் கே.வி.குப்பம் பஸ் நிலையம் அருகே வந்தது. அப்போது திடீரென பஸ் நிலையம் எதிரே உள்ள சாலை சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரியின் முன்புறம் சேதமானது. லாரி மோதிய வேகத்தில் கன்டெய்னரில் இருந்த டப்பாக்களில் இருந்த பெயிண்ட் சாலையில் வழிந்து ஆறு போல் ஓடியது.

இதனால் அவ்வழியாக இருசக்கர வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் சென்றவர்ளுக்கு பாதிப்பு ஏற்பட்டது. லாரி டிரைவர் அதிர்ஷ்டவமாக காயமின்றி தப்பினார். இதுகுறித்து தகவல் அறிந்த கே.வி.குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர். விசாரணையில் டிரைவர் தூக்க கலக்கத்தில் சென்டர் மீடியனில் மோதியது தெரியவந்தது. இதற்கிடையில் சாலையில் கொட்டிய பெயிண்ட்டால் அதிகாலை முதல் அவ்வழியாக வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. தொடர்ந்து விபத்துக்குள்ளான லாரியை போலீசார் மீட்டனர். மேலும் சாலையில் இருந்த பெயிண்டையும் அப்புறப்படுத்தினர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

சென்டர் மீடியனில் ஒளி பிரதிபலிப்பு ஸ்டிக்கர்

கே.வி.குப்பம் பஸ் நிலைய சாலையில் சென்டர் மீடியன் இருப்பது பெரும்பாலான வாகன ஓட்டிகளுக்கு தெரியவதில்லை. குறிப்பாக வெளியூர் வாகன ஓட்டிகளுக்கு தெரியாததால் இரவு நேரத்தில் இதுபோன்ற விபத்துகள் நடக்கிறது. எனவே இதனை தடுக்க சென்டர் மீடியனில் இரவு நேரத்தில் ஒளியை பிரதிபலிக்கும் ஸ்டிக்கர் ஒட்டவேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.