புதுடெல்லி: மாநிலங்களவையில் நேற்று பேசிய சமாஜ்வாடிகட்சியின் எம்பி ஜெயா பச்சன், ‘‘ நீங்கள் பணிக்கு அமர்த்தியுள்ள எழுத்தாளர்கள் சிறப்பான பெயர்களை கொடுக்கிறார்கள். நீங்கள் ஏன் அதற்கு ஆபரேஷன் சிந்தூர் என பெயரிட்டீர்கள். அவர்கள் தங்களது சிந்தூரை(குங்குமத்தை) இழந்தார்கள். 370வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பின் தீவிரவாதம் முடிவுக்கு வரும் என்று நீங்கள் மார்தட்டினீர்கள். என்ன நடந்தது? சுற்றுலா பயணிகள் அதை நம்பித் தானே அங்கு சென்றனர்.
நீங்கள் வாக்குறுதி அளித்த மக்களின் நம்பிக்கையை அழித்துவிட்டீர்கள். அந்த குடும்பங்கள் உங்களை ஒருபோதும் மன்னிக்காது. அந்த குடும்பங்களிடம் மன்னிப்பு கேட்கும் திறன் உங்களிடம் இல்லை. அதிகாரத்தில் பணிவு முக்கியமானது. நாங்கள் சுயசார்பு கொண்டவர்கள். இதனை நாங்கள் உற்பத்தி செய்கிறோம். அதனை நாங்கள் செய்கிறோம் என்று பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறினார். 25-26 பேரைக்கூட காப்பாற்றாதபோது என்ன பயன். குண்டுகள் உதவாது. அடிப்படை மனித நேயம் தேவை” என்றார்.