Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

ஒரு சொல் கொல்லும், இன்னொரு சொல் வெல்லும்!

காட்டில் ஒரு சிங்கம், ஒரு ஆட்டை அழைத்தது. ‘‘என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச் சொல்’’ என்று கேட்டது. ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு, ‘ஆமாம், நாறுகிறது’ என்று சொல்லிற்று. உடனே சிங்கம், ‘‘முட்டாளே, உனக்கு எவ்வளவு திமிர்’’ என்றுகூறி அதன் மீது பாய்ந்து குதறியது. அடுத்து சிங்கம், ஓநாயை அழைத்து, அதனுடைய கருத்தைக் கேட்டது. ஓநாய் முகர்ந்து பார்த்துவிட்டு, ‘‘கொஞ்சம்கூட நாறவில்லை’’ என்றது. சிங்கம், ‘‘மூடனே, பொய்யா சொல்கிறாய்?’’ என்றுகூறி அடித்துக் கொன்றது. பின்னர் ஒரு நரியை அழைத்து, அதே கேள்வியைக் கேட்டது. நரி சொன்னது, ‘‘நாலு நாளா கடுமையான ஜலதோஷம். அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை’’ சிங்கம் நரியை விட்டுவிட்டது. நரி தனது புத்திசாலிதனத்தால் தனக்கு ஆபத்துக் காலம் நெருங்கியிருப்பதை உணர்ந்து சாதுரியமாக நடந்துகொண்டமையால், பிழைத்துக் கொண்டது.

இறைமக்களே, எந்த நேரத்தில், எந்த நபரிடம், எதை பேசுகிறோம் என்பது மிக முக்கியமானது. ஒரு சொல் ஒவ்வொரு சூழ்நிலைக்கேற்ப அதன் பொருளும் புரிந்துகொள்ளும் விதமும் மாறுபடுகிறது. எனவே இன்று நல்ல பொருளில் உணரப்படும் அதே வார்த்தை, நாளை வேறொரு சந்தர்ப்பத்தில் வேறு பொருளை உணரச் செய்யும் ஆபத்து உள்ளது. எனவே, நாம் எதைப் பேசுகிறோம் என்பதில் மட்டுமல்ல, நாம் யாரிடம் பேசுகிறோம், எந்த சூழ்நிலையில் பேசுகிறோம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஒரு சொல் கொல்லும், இன்னொரு சொல் வெல்லும் என்றனர் நம் முன்னோர்கள். அதுமட்டுமா? ஆழம் தெரியாமல் காலை விடாதே என்றும் அழுத்தமாக சொல்லி வைத்துள்ளனர். எனவே, சூழ்நிலை தெரியாமல் வார்த்தையை விடாதிருங்கள்.

இயேசுகிறிஸ்து, வாழ்நாட்களில் உண்மையான கேள்விகளுடன் வந்தவர்களுக்கு தகுந்த சிறந்த பதில்கூறி அனுப்பினார். சிலரது கேள்விகளுக்கு பதில் கூறுவதை தவிர்த்து அமைதியாக இருந்தார். வேறு சிலருக்கு பதிலை அவர்களிடமிருந்தே வரவழைத்தார். இன்னும் சில சந்தர்ப்பத்தில் கேள்வியிலிருந்தே மற்றொரு கேள்வியை உருவாக்கி, கேள்வி கேட்பவரையே திணர விட்டார்.

ஆம், எச்சூழ்நிலையில் எத்தகைய நபர்களுக்கு பதில்கூற வேண்டுமோ அவர்களுக்கு மட்டும் பதில் கூறுங்கள். எனவேதான் இயேசுகிறிஸ்து தமது சீடர்களிடம் பின்வருமாறு கூறினார். ‘‘ஆடுகளை ஓநாய்களுக்குள்ளே அனுப்புகிறதுபோல, இதோ, நான் உங்களை அனுப்புகிறேன்; ஆகையால், சர்ப்பங்களைப்போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப்போலக் கபடமற்றவர்களுமாய் இருங்கள். மனுஷரைக்குறித்து எச்சரிக்கையாயிருங்கள்.’’ (மத்.10:16,17) இந்த இறைவசனங்கள் நம் இதயத்தின் கதவுகளில் ஆழமாக பதிவு செய்யப்பட வேண்டும். வெளுத்ததெல்லாம் பால் அல்ல என்ற மூதுரைக்கேற்ப எல்லாரையும் நல்லவர்கள் என நம்பி பொன் போன்ற (முத்துக்களை) வார்த்தைகளை அவிழ்த்து விட்டு மோசம் போகாதிருங்கள்.