Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ஒடுகத்தூர் அருகே மலைமீது அமைந்துள்ள தர்மகொண்டராஜா; கோயிலில் 25 கிலோ அரிசி, மேற்கூரையை சேதப்படுத்திய ஒற்றை தந்த யானை: 2வது நாளாக வனத்துறையினர் கண்காணிப்பு

ஒடுகத்தூர்: ஒடுகத்தூர் அருகே மலை மீது அமைந்துள்ள தர்மகொண்டராஜா கோயிலில் 25 கிலோ அரிசி, மேற்கூரை போன்றவற்றை ஒற்றை தந்த டஸ்கர் யானை நொறுக்கி சேதப்படுத்தியது. இதனை 2வது நாளாக வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் வனச்சரக பகுதிகளுக்கு உட்பட்ட சாணாங்குப்பம் காப்பு காடு, மாதனூர், உடையராஜாபாளையம், உள்ளி, கீழ்முருங்கை ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக சுற்றித்திரிந்த டஸ்கர் என்ற ஒற்றை தந்தம் கொண்ட யானை நேற்று முன்தினம் பாலூர் அருகே உள்ள வேலூர் மாவட்ட எல்லையோரம் முகாமிட்டது. இதனால், ஆம்பூர் வனத்துறையினர் அதனை தீவிரமாக கண்காணித்து வந்தனர். அதேபோல், யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட ஓசூரில் இருந்து 3 பேரும், பாலக்கோட்டில் இருந்து 4 பேரும் என 7 பேர் கொண்ட வனமோதல் தடுப்பு சிறப்பு பிரிவினர் ஆம்பூர் பகுதிக்கு விரைந்து வந்தனர்.

அப்போது, பாலூர் பகுதியில் காட்டையொட்டி உள்ள விவசாய நிலத்திற்கு சென்று கோழிப் பண்ணை அருகே இருந்த தொட்டியில் தண்ணீர் குடித்து அங்குள்ள மா மரங்களை சேதப்படுத்தியது. தற்போது, இந்த யானை வேலூர் மாவட்ட எல்லையோரம் உள்ள காப்பு காட்டில் முகாமிட்டது. இதனை ஒடுகத்தூர் மற்றும் ஆம்பூர் வனத்துறையினர் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அடர்ந்த காட்டில் சுற்றித்திரிந்த யானை நேற்று அதிகாலை 3 மணியளவில் ஒடுகத்தூர் அடுத்த குருவராஜபாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலபாடி மலை மீதுள்ள தர்மகொண்டராஜா கோயில் அருகே சென்றது. அங்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த அரிசி மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில், டஸ்கர் யானை சுமார் 25 கிலோ எடையுள்ள அரிசி மூட்டையை தூக்கி சென்று சாப்பிட்டது. மேலும், கோயிலை ஒட்டியவாறு அமைக்கப்பட்டிருந்த தகரத்தாலான மேற்கூரை தும்பிக்கையால் அடித்து உடைத்து சேதப்படுத்தி விட்டு, அங்கிருந்து அருகே உள்ள வனப்பகுதிக்குள் சென்றது.

இதுகுறித்து தகவலறிந்த, ஒடுகத்தூர் மற்றும் ஆம்பூர் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும், யானை சென்ற வழித்தடங்களை பின் தொடர்ந்து பார்த்த போது காட்டுக்கு நடுவே செல்லும் கானாற்று ஓடையில் தண்ணீர் குடித்ததற்காகன அடையாளங்கள் தென்பட்டுள்ளது. இருந்த போதிலும் யானை அங்கு இல்லை. இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வனப்பகுதியில் சுற்றித்திரியும் ஒற்றை தந்தம் கொண்ட யானை தற்போது அதன் இருப்பிடம் நோக்கி சென்று கொண்டிருக்கிறது. யானையின் நடமாட்டம் குறித்து கண்காணிக்க சுழற்சி முறையில் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணித்து வருகிறோம். நேற்று கூடிய விரைவில் யானை அதன் இருப்பிடம் சென்று விடும்’ என கூறினர்.

யானையை முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டும்

வனப்பகுதிகளில் சுற்றித்திரிந்து கொண்டிருக்கும் யானை ஆண்டு தோறும் இருப்பிடத்தை விட்டு உணவுக்காக ஆம்பூர், ஒடுகத்தூர், ஆலங்காயம் வனப்பகுதிகளில் உலா வருவது வழக்கம். வயது முதிர்வு காரணமாக கண் பார்வை சற்று குறைவாக இருப்பதாக வனத்துறையினர் தெரிவிக்கின்றனர். இப்படி உடல்நலம் பாதிக்கப்பட்டு தனிமையில் சுற்றித்திரியும் இந்த யானையை வனத்துறையினர் மீட்டு முகாமிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து அதனை பராமரிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.