தமிழ்நாட்டில் வசிக்கும் வடமாநிலத்தவரை வாக்காளராக சேர்த்தால் அரசியல் தலைகீழாகும்: திருமாவளவன் கண்டனம்
திண்டிவனம்: வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக சேர்த்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாகும் என விசிக தலைவர் திருமாவளவன் எச்சரித்து உள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ரோசனையில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் நேற்று அளித்த பேட்டி: பீகார் சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது. இதில் சிறுபான்மையினர், தலித்துகள், பழங்குடிகள் போன்ற மக்களின் வாக்குகளை நீக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவது தெரியவந்துள்ளது. ஆதார் அட்டை உள்ளிட்ட ஆவணங்களை கோருகிறார்கள். சி.ஏ.ஏ சட்டத்தை நடைமுறைப்படுத்துகிற நடவடிக்கையாக தேர்தல் ஆணையம் இதனை சோதனை முறையில் மேற்கொள்கிறது என்கிற ஐயம் எழுந்துள்ளது. தமிழ்நாட்டிலும் விரைவில் தேர்தல் வரவுள்ள சூழலில் இந்த தீவிர வாக்காளர் திருத்த நடவடிக்கை தமிழக வாக்காளர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். பாஜவுக்கு எதிராக வாக்களிக்க கூடிய சிறுபான்மையினர் மற்றும் தலித்துகளின் வாக்குகளை நீக்குவதற்குரிய முயற்சிகளும் மேற்கொள்ளப்படலாம் என்கிற ஐயம் எழுந்துள்ளது.
ஆகவே இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பிலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் மூலம் தீர்வை எதிர்பார்க்கும் அதே வேளையில் அரசியல் கட்சிகள் அனைவரும் ஒருங்கிணைந்து தேசிய அளவில் இதற்கு எதிராக போராட வேண்டிய தேவை எழுந்துள்ளதாக கருதுகிறோம். மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு தலைமை வகிக்கும் திமுகவும், அதன் தலைவருமான முதல்வர் மு.க.ஸ்டாலின், இதனை எதிர்கொள்வதற்குரிய நல்ல முடிவை எடுக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வேண்டுகோள் விடுக்கிறோம். தமிழ்நாட்டிலும் புதிய வாக்காளர் சேர்க்கிறோம் என்கிற பெயரில் லட்சக்கணக்கான வடமாநிலத்தவர்களை வாக்காளர்களாக தமிழகத்தில் சேர்ந்தால் தமிழ்நாட்டின் அரசியல் தலைகீழாக மாறிப்போகும். எனவே எந்த மாநிலத்தை சேர்ந்தவராக இருந்தாலும் தமிழ்நாட்டில் வாக்குரிமை இல்லை என்கிற நிலையை உருவாக்க வேண்டும்.
தமிழ்நாடு முதலமைச்சர் துணிந்து இந்த நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.