Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கழிவுநீர் கால்வாயை தூர்வாரும் பணி 4,100 கி.மீ. தூரம் நிறைவு: குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் தகவல்

சென்னை: சென்னை குடிநீர் வாரியம் சார்பில் அண்ணாநகர் மண்டத்திற்கு உட்பட்ட பகுதி அலுவலகத்தில் உள்ள நீரேற்று நிலையத்தின் செயல்பாடுகள், அண்ணாநகர் ‘எச்’ பிளாக்கில் உள்ள அண்ணாநகர் ‘ஏ’ கழிவுநீர் உந்து நிலையம், சாந்தி காலனியில் உள்ள அண்ணாநகர் ‘பி’ கழிவுநீர் உந்து நிலையங்களின் செயல்பாடுகளை சென்னை குடிநீர் வாரிய மேலாண்மை இயக்குனர் டி.ஜி.வினய் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:

சென்னை குடிநீர் வாரியத்தின் சார்பில் வடகிழக்கு பருவமழை முன்னிட்டு 8 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், 130 குடிநீர் பகிர்மான நிலையங்கள், 22 கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் 356 கழிவுநீர் உந்து நிலையங்கள் 24 மணி நேரமும் செயல்படுவதற்கு ஏதுவாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட உத்தரவிடப்பட்டுள்ளது. கழிவுநீர் பிரதான குழாய்களில் ஏற்படும் அடைப்புகளை சரி செய்வதற்காக 299 தூர்வாரும் இயந்திரங்கள், 73 அதிவேக கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்கள், 225 ஜெட்ராடிங் வாகனங்கள் என மொத்தம் 597 கழிவுநீரகற்றும் இயந்திரங்கள் கழிவுநீரகற்றும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மேலும், பருவமழை காலத்தில் மழைநீர் தேங்கினால் அவற்றை உடனடியாக அப்புறப்படுத்துவதற்காக பிற மாவட்டங்களிலிருந்து கூடுதலாக 60 கழிவுநீர் அகற்றும் லாரிகள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மொத்தம் உள்ள 1,60,092 இயந்திர நுழைவாயில்களில் இதுவரை 1,49,712 இயந்திர நுழைவாயில்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கழிவுநீர் குழாய்கள் கட்டமைப்பில் மொத்தம் உள்ள 4,156 கிலோ மீட்டர் நீளத்தில் இதுவரை 4,100 கிலோ மீட்டர் தூரம் தூர்வாரும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. எஞ்சிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சென்னை மாநகராட்சிக்குட்ட 15 மண்டலங்களில் கழிவுநீரகற்றும் பணிகளை 2,149 களப்பணியாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், அனைத்து நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், குடிநீர் பகிர்மான நிலையங்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் கழிவுநீர் உந்து நிலையங்கள் தடையின்றி செயல்படுவதற்கு ஏதுவாக ஜெனரேட்டர்கள் (எரிபொருளுடன்) தயார் நிலையில் வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து கழிவுநீரிறைக்கும் நிலையங்களிலுள்ள 1063 பம்புகள் மற்றும் 267 டீசல் ஜெனரேட்டர் செட்டுகள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு தயார் நிலையில் வைக்வும், குடிநீர் விநியோக நிலையங்களில் தேவையான அளவு குளோரின் பவுடர், படிகாரம், சுண்ணாம்பு போன்ற பொருட்கள் பாதுகாப்பாக வைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை காலங்களில் குடிநீர் விநியோக நிலையங்களில் மழைநீர் தேங்கினால் மழைநீரினை அகற்ற நீர் உறிஞ்சும் இயந்திரங்கள் தயார் நிலையில் இருக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடிநீர், கழிவுநீர் திட்டப்பணிகள் நடைபெறும் இடங்களில் பருவ மழைக்கு முன்னதாக சாலைவெட்டு பணிகள் முடிக்கப்பட்டு உரிய காலத்திற்குள் குழாய் பதிக்கும் பணிகள் நடைபெற வேண்டும். சாலையில் பழுதாகி உடைந்துள்ள இயந்திர நுழைவாயில் மூடிகள் கண்டறியப்பட்டு உடனடியாக மாற்றும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் கழிவுநீரகற்றல் தொடர்பாக புகார்கள் தெரிவிப்பதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் இயங்கக்கூடிய கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாட்டு அறை குடிநீர் வாரியத்தின் தலைமை அலுவலகத்தில் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தை பொதுமக்கள் 044-4567 4567 (20 இணைப்புகள்) மற்றும் கட்டணமில்லா தொலைபேசி எண்.1916-ல் தொடர்பு கொள்ளலாம். பொதுமக்களிடமிருந்து பெறப்படும் புகார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட பகுதி அலுவலகங்களுக்கு தெரிவிக்கப்பட்டு குறைகள் நிவர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.