Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

உன்னத உறவுகள்

நன்றி குங்குமம் தோழி

பாசமும் நேசமும்!

இன்று அனைத்து வசதிகளையும் நாம் அனுபவிக்கிறோம். ஆனால், வாழ்க்கை யந்திரமயமாக மாறிவிட்டது. சௌகரியங்கள் கூடக்கூட மனிதர்களுக்குள் பேச்சு வார்த்தைகள் குறைந்துவிட்டது. பாச பந்தத்தில் இடைவெளி அதிகம் காணப்படுகிறது. வெளிநாட்டில் வசிக்கும் இந்தியக் குடும்பம் ஒன்று தங்களின் சொந்த ஊரில் நடைபெற்ற குடும்ப விசேஷங்களில் பங்கு கொண்டனர். பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு உறவுகளையெல்லாம் அறிமுகப்படுத்தினர். தாத்தா, பாட்டி உறவுகளைக் கூறும் பொழுது, பிள்ளைகள் “ஓ! இவ்வளவு தாத்தா, பாட்டிகளா எங்களுக்கு” என ஆசையோடு பாசத்தோடு பார்வை விடுத்தனர். அவர்களின் பாசம் மிகுந்த பார்வை, உறவுகளை அவர்கள் எவ்வளவு தூரம் பிரிந்திருக்கிறார்கள் என்பதை தத்ரூபமாகக் காட்டியது.

ஒரு சிறுவன் தன் தாத்தாவிடம் கேட்டான், “அறிவியல் வளர்ச்சிகள் இல்லாத காலகட்டத்தில் இன்டர் நெட், தொலைக்காட்சிப் பெட்டி, கார், மொபைல், குளிர் சாதனங்கள் இல்லாமல் எப்படி உங்களால் வாழ முடிந்தது?” என்றான்.தாத்தா சொன்னார் “இப்பொழுது பெரியவர் என்கிற அடைமொழி இல்லை. தன்னடக்கம் குறைந்துவிட்டது. எதைப்பற்றியும் கவலைப்படாமல் நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள். எல்லாம் இருந்தாலும், அன்பும் பாசத்தையும் வாங்க முடியாத நிலைதான் இன்று. வண்டி ஓட்டும் போது தலைக்கவசம் கூட அணியாமல் பாதுகாப்புடன் சென்று வந்தோம். பள்ளி முடிந்து வந்தால் திறந்த வெளியில் ஆனந்தமாக விளையாடினோம். தோழர்களுடன் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இருந்தது.

முன் அறிவிப்பு இல்லாமல் நண்பர்கள் வீட்டுக்கு செல்வோம். தாகம் எடுத்தால் பக்கத்து வீட்டு குழாயில் தண்ணீர் குடித்தோம். இன்று போல் ‘மினரல் தண்ணீர்’ கிடையாது. நண்பர்களுடன் ஒரே தட்டில் வீட்டில் செய்யும் உணவுகளை பங்கிட்டு சாப்பிட்டோம். துரித உணவுகள் எங்களுக்குத் தெரியாது. செறுப்பு கூட போடாமல் ஓடினோம். விடுமுறை நாட்களில் பொம்மைகள் செய்வது, ஆற்று மணலில் கோபுரம், வீடு கட்டி விளையாடுவோம்.

இன்று நீங்கள் அதைத்தான் ‘கிளே’ என்ற பெயரில் ‘ப்ராஜக்ட்’ ஆக செய்கிறீர்கள். அன்புதான் அனைத்திற்கும் பரிசாகக் கிடைக்கும். பெற்றோர்களுடன் உறவினர்களும் அருகருகே வசித்ததால் நேரம் போவது தெரியாது. என்றாவது ஒரு நாள் கருப்பு, வெள்ளைப் படம் பார்க்க குடும்பமாக செல்வதுண்டு. ஆனாலும், பெற்றோர் சொல் மதித்து நடந்தோம். இன்றைய காலம் முற்றிலும் மாறிவிட்டது” என்று முடித்தார் தாத்தா.

உண்மையில் எந்த வசதிகளும் இல்லாத காலத்தில் மகிழ்ச்சியும், குதூகலமும் காணப்பட்டது. இன்று அவை காணாமல் போய்விட்டன. சரிசமமாக அனைவரும் பேசக்கூட முடியவில்லை. பாட்டி கதைகள் சொல்லிக் கொண்டே பேரக்குழந்தைகளை வயிறார உண்ண வைப்பார். தாத்தா பிள்ளைகளுடன் கொஞ்சி விளையாடுவார். பெரியப்பா பார்க்க கண்டிப்பான தொனியில் பிரதிபலித்தாலும், ஒருவர் ஓடி ஒளிய சென்றால் கூட ‘எங்கே’ என்று உடன் அக்கறையுடன் விசாரிப்பார். அம்மா கண்டிக்கும் போதெல்லாம் பெரியம்மா ஆறுதல் சொல்லி அரவணைப்பார். சித்தி-சித்தப்பா வார்த்தையே சுவாதீனமான உறவு என்பதைக் காட்டும். அத்தை, மாமா உறவுகள் பிரதானமானது என்பதால், அவர்கள் இல்லாமல் ஒரு விசேஷம் கூட பூர்த்தியாகாது. காலம் காலமாக அவர்களின் சீர் செய்யும் பங்கு மேடைகளில் முக்கிய இடம் பிடிக்கும்.

காலம் மாறினாலும், ரத்த பந்தங்கள் தன் முன்னோர்கள் பின்பற்றிய கடமைகளை தவறாமல் முறைப்படுத்தி வருகிறார்கள். சொந்த உறவுகள் இல்லையென்றாலும் பங்காளி என்று சொல்லக்கூடிய உறவு முறைகள் அனைத்து சடங்குகளையும் அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லி பந்தங்கள் அறுபடாமல் காப்பாற்றி வருகிறார்கள். ஒரே ஊரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிந்தவுடனே விசாரிப்பார்கள். கடைசியில் அங்கு சுற்றி, இங்கு சுற்றி ஒரு உறவில் வந்து முடியும்.

உறவுகள் என்றாலே நம் இரு கைகளின் பத்து விரல்கள் எனலாம். அதனால் தானே என்னவோ நாம் எப்பொழுதும் இருகரம் கூப்பி வணங்குகிறோம். அது எப்படி நம் மரியாதையைக் காட்டுகிறதோ, அது போல் உறவுகளுடன் கூடி வாழும் வாழ்க்கை நமக்கு ஒரு பிடிப்பை ஏற்படுத்தித் தருகிறது. மனிதர்களாகப் பிறத்தல் பாக்கியம். காரணம், தனித்து விடப்படாமல் நம்மைச் சுற்றி பாதுகாப்பு வளையமாக நம் உறவினர்கள் தாங்கிப் பிடிக்கிறார்கள் என்பது கடவுள் நமக்கு ஏற்படுத்தித் தந்த வரம். இன்றைய காலகட்டம், நாம் அனைவருமே எதற்காகவோ ஓடிக் கொண்டிருக்கிறோம்.

விருந்தோடு ஒரு வேளை உணவளிப்பதைவிட, பாசத்தோடு கஞ்சி கொடுத்தால் போதும் என்று சிலர் புலம்புகிறார்கள். இளமையில் தனித்து வாழலாம். வயதாகும் போது அனைவருக்கும் அன்பும் அரவணைப்பும் தேவைப்படுகிறது. நாம் வாழ்க்கையில் எப்படி பிறரை அணுகுகிறோம் என்பதைத்தான் அடுத்த தலைமுறை நம்மை பார்த்துக் கற்றுக்கொள்கிறார்கள். எல்லோருக்கும் முதுமை ஒருநாள் வந்து சேரும். அப்பொழுது நம் எண்ணங்கள் எப்படியிருக்கும் என்பதை யோசித்தால் அனைத்தும் புலப்படும். பசுமை நிறைந்த இளமைப் பருவங்களை பிள்ளைகளிடம் எடுத்துச் செல்வோம். அவர்களும் சிறகடித்துப் பறக்கட்டும். அதே சமயம் இரை தேட வரும் பறவை போல, சொந்த இடத்திற்கும், ெசாந்தக்காரர்களுக்கும் பாசப் பறவைகளாக என்றுமே விளங்கட்டுமே!

மேற்கத்திய கலாச்சாரம் தலைதூக்கினாலும், பாசபந்தம் என்பது நம் மனநிலையோடு தொடர்புடையது. சிறு வயதில் நமக்குக் கிடைத்த மகிழ்ச்சியும், அரவணைப்பும் இன்றைய பிள்ளைகளுக்கும் கிடைப்பதில்லை. நாம் சொல்லும் பால்யப் பருவ கதைகளை கேட்கவும் யாரும் தயாராக இல்லை. பிள்ளைகளின் காலம் கணினி யுகம். பெரியவர்கள், உறவினர்கள் இருக்கும் வீடுகளில் அவர்களின் நடைமுறை வாழ்க்கையை பார்த்து பிள்ளைகள் கற்றுக்கொள்ள முடியும். பெரியவர்கள் செய்வதைத்தான் பிள்ளைகளும் பின்பற்றுவார்கள். தொலைபேசி வசதிகள் இல்லாத காலத்தில் கடிதப் போக்குவரத்துதான் பழக்கத்தில் இருந்தது.

குறிப்பாக முக்கியமான சமயங்களில் மட்டுமே செய்தி அனுப்புவர். விருந்தினர் வீடுகளுக்கு வந்தால், அவர்களை மகிழ்ச்சி பொங்க வரவேற்பார்கள். இன்று முன்னறிவிப்பின்றி எந்த உறவினர் வீட்டுக்கும் செல்ல முடியாது. உறவினர் வீடுகளுக்குச் செல்லும் பழக்கமும் குறைந்துவிட்டது. நமக்கே இப்படியானால், வளரும் சமுதாயத்தில் உறவுகள் எப்படி காக்கப்படும் என்ற அச்சம் ஏற்படுகிறது. நம் பெற்றோர்கள் ஊருடன் கூடி வாழ்ந்து ஆரோக்கியமான வாழ்வை வாழ்ந்தார்கள்.

அவர்கள் நமக்கு உறவுகளை அறிமுகப்படுத்தி, பல்வேறு உறவுகளை பக்கபலமாக்கினார்கள். வளரும் சமூகமும், அடுத்தடுத்த சந்ததியினரும் பாசம் கிடைக்காமல், பரிவு காட்ட யாருமின்றி எப்படி தன் குழந்தைகளுக்கு பாச-பந்தத்தை எடுத்துரைப்பார்கள் என்பது நம் கையில்தான் இருக்கிறது. அதற்கென்று பள்ளிகள் கிடையாது. நம் வாழ்க்கைதான் அவர்களுக்கு முன்மாதிரியாக அமைய வேண்டும். நேரம் கிடைக்கும் போதெல்லாம் உறவினர்களை அறிமுகப்படுத்தி கவலையில்லா வாழ்க்கை வாழ வழி செய்வோம். உறவுகள்தான் தனிமைக்கு பலம்!

தொகுப்பு: மா.வினோத்குமார்