ஊட்டி, டிச.1: பழங்குடியினர் பள்ளிகளில் பயிலும் 12ம் வகுப்பு மாணவர்களுடன் உயர்கல்வி வழிகாட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. நீலகிரி மாவட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் எம்.பாலாடா ஏகலைவா பள்ளி, கார்குடி மற்றும் குஞ்சப்பனை பழங்குடியினர் பள்ளிகள் இயங்கி வருகிறது. இந்த பள்ளிகளில் 12ம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கான உயர் கல்வி வழிகாட்டி ஆலோசனை கூட்டம் ஊட்டியில் உள்ள கூடுதல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இக்கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா தண்ணீரூ தலைமை வகித்தார். இக்கூட்டத்தில், 12ம் வகுப்பு முடித்த பின்னர் மாணவ, மாணவிகள் உயர் கல்வி எவ்வாறு தொடர வேண்டும். எந்தெந்த பாடத்திட்டங்களை எடுத்தால் எளிதாக படிக்க முடியும். வேலை வாய்ப்பு அதிகம் உள்ள பாடங்களை படிப்பது குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட்டது. மேலும், தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் சலுகைகள் மற்றும் உதவித்தொகைகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டது.
இக்கூட்டத்தில், நீலகிரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் பலர் கலந்துக் கொண்டனர்.

