Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு கொலை முயற்சிக்கான நோக்கத்தை அறிய முடியாமல் எப்பிஐ திணறல்: ஈரான் மீதான சந்தேகத்தால் பரபரப்பு

பெத்தேல் பார்க்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்திய நபரின் நோக்கம் குறித்து எந்த துப்பும் கிடைக்காமல் எப்பிஐ திணறி வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவத்தின் பின்னணியில் ஈரானின் சதி இருப்பதாக வெளியான தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன. அமெரிக்காவில் அதிபர் தேர்தல் வரும் நவம்பர் 5ம் தேதி நடக்க உள்ளது. இதில், தற்போதைய அதிபரும் ஜனநாயக கட்சி வேட்பாளருமான ஜோ பைடனை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் போட்டியிடுகிறார். கடந்த 14ம் தேதி, பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் டவுனில் திறந்தவெளியில் டிரம்ப் பிரசாரம் செய்து கொண்டிருந்த போது, அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது. இதில் டிரம்ப் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். சரியான நேரத்தில் முகத்தை திருப்பியதால் டிரம்ப்பின் காதை துளைத்துக் கொண்டு தோட்டா சென்றது.

உடனடியாக டிரம்ப் பாதுகாவலர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், 20 வயதுடைய தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்பவர் கொல்லப்பட்டார். இவர் தான் டிரம்ப் மீது துப்பாக்கி சூடு நடத்தியதாக சந்தேகிக்கப்படும் நபர். இந்த வழக்கை எப்பிஐ விசாரித்து வருகிறது. இந்நிலையில், சம்பவம் நடந்து 3 நாளாகியும் கொலை முயற்சிக்கான நோக்கத்தை கண்டுபிடிக்க முடியாமல் எப்பிஐ திணறி வருகிறது. க்ரூக்ஸின் செல்போன், கம்ப்யூட்டர், வீடு, கார் என அனைத்தையும் சோதனையிட்டும் எந்த துப்பும் கிடைக்கவில்லை. க்ரூக்ஸ் சம்மந்தப்பட்ட 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரித்தும் எந்த ஆதாரமும் சிக்கவில்லை. க்ரூக்ஸ் எப்போதும் தனிமை விரும்பியாக இருப்பார் என பள்ளியிலும், கல்லூரியிலும் அவருடன் படித்த மாணவர்கள் கூறி உள்ளனர். சில சமயம் கிண்டல், கேலிக்கு ஆளானதால் க்ரூக்ஸ் யாரிடனும் ஒட்டாமல் செல்போன் பார்ப்பது, ஹெட்போனில் பாட்டு கேட்பது என தனியாக இருப்பார் என மாணவர்கள் கூறி உள்ளனர். அவருக்கென நட்பு வட்டாரம் எதுவுமில்லை.

அரசியல் ரீதியாகவும் க்ரூக்ஸுக்கு எந்த வலுவான தொடர்பும் இல்லை. அவர் குடியரசு கட்சியின் உறுப்பினராக பதிவு செய்திருந்தாலும், பைடன் அதிபரான பிறகு ஜனநாயக கட்சி சார்ந்த அமைப்புக்கு நன்கொடை தந்துள்ளார். துப்பாக்கி பயிற்சி பெறும் ரைபிள் மையத்தில் பயிற்சி பெற்றுள்ளார். ஆனால் அதிலும் கைதேர்ந்தவராக இல்லை. சம்பவத்திற்கு முன்பு 50 ரவுண்டு தோட்டாக்களை க்ரூக்ஸ் வாங்கி உள்ளார். ஆனாலும் க்ரூக்ஸ் எதற்காக டிரம்ப்பை கொல்ல முயன்றார் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

இதற்கிடையே, டிரம்ப் கொலை முயற்சியில் ஈரான் நேரடியாக சம்மந்தப்பட்டிருக்கலாம் என கிளப்பப்படும் சந்தேகம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த 2020ம் ஆண்டு ஈரான் ராணுவ ஜெனரல் காசிம் சுலைமானியை அமெரிக்கா டிரோன் மூலம் சுட்டுக் கொன்றது. அப்போது அதிபராக டிரம்ப் இருந்ததால் இதற்கு பழிவாங்கும் வகையில் கொலை முயற்சி நடந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகின. இந்த குற்றச்சாட்டை ஈரான் மறுத்துள்ளது. அந்நாட்டின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி நேற்று அளித்த பேட்டியில், ‘‘டிரம்ப் மீதான தாக்குதலில் ஈரான் சம்மந்தப்பட்டிருப்பதாக கூறும் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கிறோம். இதுபோன்ற செயல்களில் ஈரான் எப்போதும் ஈடுபடாது. அதே சமயம் சுலைமானி மரணம் தொடர்பாக டிரம்ப் மீது சட்ட நடவடிக்கையை ஈரான் நிச்சயம் எடுக்கும்’’ என்றார்.