மாஸ்கோ: உக்ரைன் ரஷ்யா போர் மூன்றாண்டுகளை கடந்தும் முடிவின்றி நீடிக்கிறது. இந்த போரில் அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள் உக்ரைனுக்கு உதவி வருவதால் ரஷ்யாவை உக்ரைன் எதிர்த்து வருகிறது. உக்ரைனுக்கு உதவி வந்தாலும் போர் நிறுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் டிரம்ப் இருநாடுகளையும் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரஷ்யாவில் உள்ள ஒரு எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. ரஷ்யாவின் கருங்கடல் ரிசார்ட்டான சோச்சி அருகே உள்ள எண்ணெய் கிடங்கு மீது உக்ரைன் ராணுவம் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ச்சியாக டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்தி உள்ளது. இதனால் எண்ணெய் கிடங்கு முழுவதும் தீப்பற்றி வானுயர கொழுந்து விட்டு எரிந்தது. சம்பவ இடத்துக்கு வந்த 120க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் நீண்டநேர போராட்டத்துக்கு பிறகு தீயை அணைத்தனர்.
இதேபோல் ரஷ்யாவின் வடக்கே வோரோனேஜ் பகுதியில் குடியிருப்புகள் மீது உக்ரைன் நடத்திய டிரோன் தாக்குதலில் 4 பேர் காயமடைந்தனர். ரஷ்யாவின் கருங்கடல் பகுதியில் நேற்று அதிகாலை வரை உக்ரைனின் 93 டிரோன்களை ரஷ்ய வான்பாதுகாப்பு படைகள் சுட்டு வீழ்த்தியதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனிடையே தெற்கு உக்ரைனின் மைக்கோலைவ் நகரில் உள்ள குடியிருப்பு பகுதிகள் மீது ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 7 பேர் காயமடைந்ததாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா 76 டிரோன்கள், 7 ஏவுகணைகளை ஏவி தாக்கியது. இதில் 60 டிரோன்கள் மற்றும் ஒரு ஏவுகணையை உக்ரைன் ராணுவம் இடைமறித்து அழித்து விட்டதாக உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது.