மாலே: மாலத்தீவின் 60வது சுதந்திர தின விழாவில் கவுரவ விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். பிரதமர் நரேந்திரமோடி இரண்டு நாள் அரசு முறை பயணமாக மாலத்தீவு சென்றார். அங்கு மாலத்தீவின் அதிபர் முய்சுவை சந்தித்துப்பேசினார். இரண்டாவது நாளாக நேற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி பங்கேற்றார். அவர் மாலத்தீவின் துணை அதிபர் உஸ் ஹூசைன் முகமது லத்தீப்புடன் பிரதமர் மோடி கலந்துரையாடினார்.
பிரதமர் மோடி மாலத்தீவு நாடாளுமன்ற சபாநாயகர் அப்துல் ரஹீம் அப்துல்லாவையும் சந்தித்துப்பேசினார். பின்னர் பேசிய பிரதமர் மோடி, ‘நமது நாடாளுமன்றங்களுக்கு இடையிலான நெருங்கிய உறவு உட்பட ஆழமாக வேரூன்றிய இந்தியா-மாலத்தீவு நட்புறவு பற்றி இருவரும் பேசினோம். மாலத்தீவில் திறன் மேம்பாட்டை ஆதரிப்பதில் இந்தியா தொடர்ந்து உறுதியாக இருக்கிறது’ என்றார்.
பின்னர் மாலத்தீவின் முன்னாள் அதிபர் முகமது நஷீத் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார். தொடர்ந்து மாலத்தீவின் 60வது சுதந்திர தின விழாவில் பிரதமர் மோடி கவுரவ விருந்தினராக கலந்து கொண்டார். தலைநகரின் மையப்பகுதியில் உள்ள குடியரசு சதுக்கத்தில் நடந்த விழாவில் பிரதமர் மோடியை அதிபர் முய்சு மற்றும் அமைச்சர்கள் அன்புடன் வரவேற்றனர்.
சுமார் 50 நிமிடங்கள் நடந்த விழாவை பிரதமர் மோடி அதிபர் முய்சு அருகில் அமர்ந்து பார்வையிட்டார். விழாவில் குழந்தைகள் மற்றும் பாரம்பரிய கலைஞர்களின் கலாச்சார நிகழ்ச்சிகள், ராணுவ அணிவகுப்பு உள்ளிட்டவை நடைபெற்றது. முன்னதாக பிரதமர் மோடி தனது எக்ஸ் தள பதிவில்,’உள்கட்டமைப்பு, தொழில்நுட்பம், காலநிலை மாற்றம், எரிசக்தி மற்றும் பல துறைகளில் நமது நாடுகள் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து செயல்படுகின்றன.
இது நமது மக்களுக்கு மிகவும் பயனுள்ள நன்மையை பயக்கும். வரும் ஆண்டுகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டாண்மையை மேலும் ஆழப்படுத்த எதிர்நோக்குகிறோம். மாலத்தீவின் 60வது சுதந்திர தினத்திற்கு வாழ்த்துக்கள்’ என்று குறிப்பிட்டு இருந்தார். அதை தொடர்ந்து பிரதமர் மோடி இந்தியாவுக்கு திரும்பினார்.