அந்த காலம் மலையேறி போச்சு..! அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியர்களை பணியமர்த்த டிரம்ப் எதிர்ப்பு
நியூயார்க்: வாஷிங்டன்னில் நேற்று முன்தினம் நடந்த செயற்கை நுண்ணறிவு மாநாட்டில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், “நாட்டின் நலனுக்காக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது மிகவும் அவசியம்” என்றார். தொடர்ந்து பேசிய டிரம்ப், “நீண்டகாலமாகவே அமெரிக்க தொழில்நுட்பத்துறை உலக மயமாக்கலை பின்பற்றி வருவது லட்சக்கணக்கான அமெரிக்கர்களை நம்பிக்கை அற்றவர்களாகவும், துரோகிகளாகவும் உணர வைத்தது.
அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் இந்தியர்களை பணியமர்த்தின. அதேசமயம் அமெரிக்கர்களை பணி நீக்கம் செய்தன. சீனாவில் பல தொழிற்சாலைகளை நிறுவி உள்ளன. இது அமெரிக்காவின் சுதந்திரத்தை சீர்குலைத்தது. அந்த காலம் மலையேறி போச்சு. என்னுடைய ஆட்சியில் அமெரிக்க நிறுவனங்கள் அமெரிக்காவுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். அமெரிக்க நிறுவனங்கள் இந்தியர்களை பணியமர்த்துவதையும், சீனாவில் தொழில்நிறுவனங்கள் அமைப்பதையும் விடுத்து, அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும். அமெரிக்காவின் வளர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.