மாஸ்கோ: நடுவானில் தகவல் தொடர்பை இழந்து மாயமான ரஷ்ய விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 48 பேரும் பலியானதாக அமூர் பிராந்திய தலைவர் அறிவித்துள்ளார். ரஷ்யாவின் கிழக்கு பகுதியில் இருந்து 49 பேருடன் அங்காரா ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.என்.24 ரக விமானம் நேற்று புறப்பட்டுச் சென்றது. விமானத்தில் விமான பணியாளர்கள் 6 பேர், குழந்தைகள் 5 பேர் உட்பட 48 பேர் பயணம் செய்தனர்.
விமானம், சீனா எல்லையையொட்டி அமுர் மகாணத்தில் உள்ள டின்டா விமான நிலையம் அருகே சென்றபோது திடீரென விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இதனால் விமான நிலைய கட்டுப்பாட்டு அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். விமானத்துடனான தொடர்பை மீண்டும் கொண்டு வர அதிகாரிகள் முயற்சி மேற்கொண்டனர் இந்நிலையில் மாயமான விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானது கண்டுபிடிக்கப்பட்டது.
திண்டா நகரில் மலைப்பாதையில் விமானம் எரிந்து கொண்டு இருப்பது தெரியவந்தது. விபத்து நடந்த இடத்தின் படங்கள் புகை மூட்டத்தால் சூழப்பட்ட அடர்ந்த காட்டுப்பகுதியை காட்டுகின்றது. விபத்து நிகழ்ந்த இடத்தில் மோசமான வானிலை நிலவி வருகின்றது. சம்பவ இடத்துக்கு மீட்பு குழுவினர் விரைந்து மீட்பு பணிகளை மேற்கொண்டுள்ளனர்.
இந்த விபத்தில் விமானத்தில் பயணித்த 48 பேரும் உயிரிழந்ததாக அமூர் பிராந்திய தலைவர் தெரிவித்துள்ளார். பயங்கரமான இந்த சோக சம்பவத்தை அடுத்து மூன்று நாட்கள் துக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விமானம் 50 ஆண்டுகள் பழமைவாய்ந்தது என பல ரஷ்ய நிறுவனங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.