Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மிகவும் நம்பகமான நட்பு நாடு; மாலத்தீவுக்கு ரூ.4,850 கோடி கடன் உதவி: பிரதமர் மோடி அறிவிப்பு

மாலே: மாலத்தீவின் மிகவும் நம்பகமான நண்பர் என்பதில் இந்தியா பெருமை கொள்கிறது என்று அறிவித்த பிரதமர் மோடி, ரூ.4,850 கோடி கடன் வழங்குவதாக அறிவித்தார்.இங்கிலாந்து மற்றும் மாலத்தீவு நாடுகளுக்கு பிரதமர் மோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இங்கிலாந்து நாட்டில் வரலாற்றுசிறப்பு மிக்க வர்த்தக ஒப்பந்தம் முடிந்த பிறகு நேற்று காலை அவர் மாலத்தீவு சென்றார். மாலேயில் உள்ள வெலினா ஏர்போர்ட்டில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிபராக பதவி ஏற்றது முதல் இந்தியாவுடன் முரண்பட்டு இருந்த மாலத்தீவு அதிபர் முகமது முய்சு மற்றும் மூத்த அமைச்சர்கள் விமான நிலையத்திற்கே வந்து பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அதை தொடர்ந்து மாலத்தீவு குடியரசு சதுக்கத்தில் பிரதமர் மோடிக்கு 21 குண்டுகள் முழங்க சம்பிரதாய வரவேற்பு அளிக்கப்பட்டது.

பின்னர் மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவுடன் பிரதமர் மோடி இருநாடுகள் இடையே வர்த்தகம், பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளில் ஒத்துழைப்பை ஒருங்கிணைப்பது குறித்து விரிவாக பேச்சுவார்த்தை நடத்தினார். 2023 நவம்பரில் அதிபராக முய்சு பதவி ஏற்றது முதல் இந்தியா ராணுவத்தை வெளியேற்றி, சீனா பக்கம் திரும்பியதால் இருநாடுகள் இடையே ஏற்பட்ட பதற்றம் இதன் மூலம் தணிந்தது. மேலும் இருதரப்பு முதலீட்டு ஒப்பந்தத்தை இறுதி செய்வதற்கான பேச்சு வார்த்தை நடந்தது.

இந்த பேச்சுவார்த்தை முடிவில் இந்தியா சார்பில் மாலத்தீவுக்கு ரூ. 4,850 கோடி கடன் வழங்க முடிவு செய்துள்ளதாக மோடி தெரிவித்தார். அதோடு பாதுகாப்பு துறையில் பரஸ்பர ஒத்துழைப்பு மற்றும் பரஸ்பர நம்பிக்கை அடிப்படையில் செயல்பட முடிவு செய்து இருப்பதாகவும், மாலத்தீவின் பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்த இந்தியா எப்போதும் ஆதரவளிக்கும் என்றும் தெரிவித்த மோடி,’ என்னை வரவேற்க விமான நிலையத்திற்கு வந்த அதிபர் முய்சுவின் செயல் என்னை மிகவும் நெகிழ்ச்சியடையச் செய்துள்ளது. வரும் காலங்களில் இந்தியா-மாலத்தீவு நட்புறவு முன்னேற்றத்தின் புதிய உயரங்களை எட்டும் என்று நான் நம்புகிறேன்’ என்று தெரிவித்தார்.