டெல் அவிவ்: ஹமாஸ் அமைப்பால் பிடித்து வைக்கப்பட்ட இஸ்ரேல் பிணைக்கைதி ஒருவர், பட்டினியால் எலும்பும் தோலுமாகக் காட்சியளித்து தனக்குத்தானே கல்லறை தோண்டும் கொடூரக் காணொளி வெளியாகி உள்ளது. கடந்த 2023, அக்டோபர் 7ம் தேதி இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலில், பொதுமக்கள் உட்பட 1,219 பேர் கொல்லப்பட்டனர். அப்போது பலரைப் பிணையக்கைதிகளாக ஹமாஸ் மற்றும் அதன் ஆதரவு பாலஸ்தீனக் குழுக்கள் பிடித்தச் சென்றன. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல், காசா மீது நடத்திய மிகக் கடுமையான தாக்குதலில் 60,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். தற்போது 49 பிணையக்கைதிகள் ஹமாஸ் பிடியில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஹமாஸ் அமைப்பு எவ்யாதர் டேவிட் (24) என்ற பிணையக்கைதியின் காணொளி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், அவர் எலும்பும் தோலுமாக உருக்குலைந்து, பேசுவதற்கே சிரமப்பட்ட நிலையில், சுரங்கப்பாதை ஒன்றில் மண்வெட்டியால் தனக்குத்தானே கல்லறை தோண்டுவது போன்ற காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் மெல்லிய குரலில் பேசும் அவர், ‘நான் இப்போது எனக்கான கல்லறையைத் தோண்டுகிறேன். ஒவ்வொரு நாளும் என் உடல் பலவீனமடைந்து வருகிறது. நேரடியாக நான் எனது கல்லறைக்குச் செல்கிறேன். நேரம் கடந்து கொண்டிருக்கிறது’ எனக் கூறி அழுகிறார்.
இதை வெளியிட்ட அவரது குடும்பத்தினர், ‘எங்கள் மகனைப் பட்டினி போடும் செயல், உலகம் கண்ட கொடூரங்களில் ஒன்று’ எனக் கூறியுள்ளனர். இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸின் இந்தச் செயலைக் கண்டித்துள்ளதுடன், பிணையக்கைதிகளை மீட்கும் முயற்சி தொடர்வதாகத் தெரிவித்துள்ளார். இதேபோல், மற்றொரு கைதியின் வீடியோவும் வெளியாகியுள்ள நிலையில், கைதிகளை மீட்கக் கோரி தலைநகர் டெல் அவிவ் நகரில் பல்லாயிரக்கணக்கான இஸ்ரேலியர்கள் மாபெரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.