நியூயார்க்: ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியம் உலக நாடுகளின் பொருளாதார வளர்ச்சி குறித்த அறிக்கையை நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 2025 மற்றும் 2026ம் ஆண்டுகளில் சராசரியாக 6.4 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 2025ம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7 சதவீதமாகவும், 2026ம் ஆண்டில் 6.4 சதவீதமாகவும் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து ஐஎம்எப் ஆராய்ச்சித் துறை தலைவர் டெனிஸ் இகன் கூறுகையில், ‘‘இந்தியா உண்மையில் நிலையான வளர்ச்சியை கொண்டுள்ளது. இது, வலுவான நுகர்வு வளர்ச்சிக்கான சீர்த்திருத்த நடவடிக்கைகள் மற்றும் பொது முதலீட்டிற்கான ஊக்க நடவடிக்கைகள் மூலம் சாத்தியமாகிறது. இந்த வேகத்தை தக்க வைப்பதும், சமீபத்திய வளர்ச்சி செயல்திறனை தொடர்வதும் இந்தியாவுக்கு முக்கியம். மேலும், 2025ம் ஆண்டில் உலகளாவிய வளர்ச்சி 3 சதவீதமாகவும், 2026ம் ஆண்டில் 3.1 சதவீதமாகவும் இருக்கும் என்று ஐஎம்எப் தெரிவித்துள்ளது.