Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

காற்றாலைகளின் ஆற்றலை அதிகரிக்க தமிழ்நாடு காற்றாலைகள் புதுப்பித்தல், ஆயுள் நீட்டிப்பு கொள்கை-2024 வெளியீடு

சென்னை: தமிழ்நாடு மின் வாரியம் அனல், எரிவாயு, மின் நிலையங்கள் போன்ற மரபுசார் எரிசக்தி ஆதாரங்கள் முலமாகவும், சூரிய சக்தி, காற்றாலை, நீர் மின் நிலையங்கள் போன்ற புதுபிக்கத்தக்க ஆற்றல் மூலமாகவும் மின்சாரம் உற்பத்தி செய்து வருகிறது. மேலும் தமிழக அரசு புதுப்பிக்கத்த எரிசக்தி ஆற்றலை ஊக்குவிக்க தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் என்ற நிறுவனத்தையும் உருவாக்கியுள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு காற்றாலை ஆற்றல் திட்டங்களுக்காக தனது முதல் புதுப்பித்தல் மற்றும் ஆயுள் நீட்டிப்பு கொள்கை 2024-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் இதுபோன்ற கொள்கையை கொண்டு வந்த முதல் மாநிலம் என கூறப்படுகிறது. இந்த கொள்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து 2030 மார்ச் 31ம் தேதி வரை அல்லது புதிய மறுசீரமைப்பு கொள்கை அறிவிக்கப்படும் வரை நடைமுறையில் இருக்கும்.

இதுகுறித்து மின் வாரிய அதிகாரிகள் கூறியதாவது: இந்த கொள்கை காற்றாலை மின் உற்பத்தியாளர்களை ஆதரிப்பதன் மூலம் காற்றாலை ஆற்றல் வளங்களை சிறப்பாக பயன்படுத்துவதை நோக்கமாக கொண்டுள்ளது. இந்த கொள்கையின்படி, ஒற்றை உரிமையாளர்களுக்கு தனித்த திட்டங்களாகவும், பல உரிமையாளர்களுக்கு ஒருங்கிணைப்பு திட்டங்களாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. 20 வருட பழமையான அனைத்து காற்றாலை மின் உற்பத்தியாளர்களும் கட்டாயம் கொள்கையில் இணைய வேண்டும், மற்றவர்கள் விருப்பம் இருந்தால் இணையலாம். உரிமையாளர்கள் தங்கள் காற்றாலைகளை மீட்டெடுக்க, ஒரு மெகாவாட்டிற்கு ₹30 லட்சம் மேம்பாட்டு கட்டணமாக செலுத்த வேண்டும். மறுபயனளிக்கப்பட்ட விசையாழிகளின் ஆயுட்காலம், மறுபயனேற்றத்திற்குப் பிறகு இயக்கப்பட்ட நாளிலிருந்து 25 ஆண்டுகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இந்த கொள்கையின் கீழ், காற்றாலைகள் கடந்த 3 ஆண்டுகளில் சராசரி மின் உற்பத்தியில் 90 சதவீதம் அடைந்தால், அடுத்த 5 ஆண்டுகளுக்கு ஆயுள் நீட்டிப்பு வழங்கப்படும். 20 ஆண்டுகள் செயல்பட்ட அல்லது வடிவமைப்பு ஆயுளை முடித்த 90 நாட்களுக்குள் காற்றாலைகள் ஆயுள் நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். தற்போது, ​​2018 மார்ச் 31ம் தேதிவரை செயல்பாட்டுக்கு வந்த காற்றாலைகளுக்கான வருடாந்திர வங்கி ஏற்பாடுகள் அனுமதிக்கப்படுகிறது. இந்த கொள்கையின்படி 20 ஆண்டுகால செயல்பாட்டை முடித்த காற்றாலைகள் தகுதிபெறும், ஆனால் அவை மறுபயனேற்றம், புதுப்பித்தல், அல்லது ஆயுள் நீட்டிப்புக்கு ஒப்புக்கொள்ள வேண்டும். அதே நிதியாண்டில் மே முதல் மார்ச் வரையிலான 50 சதவீத வங்கி வசதிகளை மட்டுமே பசுமை எரிசக்தி கழகம் அங்கீகரிக்கும். முதன்முறையாக காற்றாலை திட்டங்களை காற்றாலை-சூரிய சக்தி இணைந்த திட்டங்களாக மாற்ற தமிழகமும் அனுமதி அளித்துள்ளது.