Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
search-icon-img
Advertisement

வைக்கம் ஆறு குட்டி சிறை பெரியார் நினைவகமாக மாற்றம்: அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல்

சென்னை: கேரள மாநிலம், வைக்கத்தில் ஆறு குட்டி சிறையை தந்தை பெரியார் நினைவகமாக அமைக்க அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார். கேரள மாநிலம், வைக்கம் போராட்டத்தில் கைதாகி சிறை வைக்கப்பட்டிருந்த ஆறுகுட்டி சிறையை முதலமைச்சரின் அறிவுரையின்படி, பெரியார் நினைவகமாக அமைத்திடும் பொருட்டு வைக்கத்தில் அடிக்கல் நாட்டு விழா நடந்தது. கேரள மீன்வளம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் சஜி செரியான் தலைமை வகித்தார். தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது: வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்ட பெரியார் இரண்டு முறை கைது செய்யப்பட்டுள்ளார். முதல் முறை ஒருமாத காலம் தண்டனையில் இந்த ஆறுகுட்டி சிறையில் வைக்கப்பட்டிருந்தார். இந்த இடத்தில் ஒரு சிறைச்சாலையை போல நினைவு சின்னம் அமைக்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். வைக்கம் போராட்ட வெற்றியின் நூற்றாண்டு விழா கடந்த ஆண்டு நடந்தபோது, வைக்கத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கட்டப்பட்டுள்ள பெரியார் நினைவகம் ரூ.8.14 கோடி செலவில் புதுப்பிக்கப்பட்டு, புதியதாக நூலகம் ஒன்றும் கட்டித் திறந்து வைக்கப்பட்டது.

அந்த விழாவில், கேரள மீன்வளம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் சஜி செரியான் முழு ஒத்துழைப்பு வழங்கினார். தற்போது, பெரியார் நூலகத்தையும், நினைவகத்தையும் 12,737 பேர் பயன்படுத்தி உள்ளனர். முதல்வர் மு.க.ஸ்டாலின் 12.12.2024, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், பெரியார் சிறை வைக்கப்பட்ட இடத்தில் நினைவகம் அமைக்க வேண்டுமென்ற கோரிக்கை வைத்தார். அதன் தொடர்ச்சியாக, கேரள மாநில அரசாங்கம் 0.58 சென்ட் நிலத்தை எந்தவித கட்டணமுமின்றி, தமிழ்நாடு அரசிடம் ஒப்படைத்துள்ளது.

தந்தை பெரியாரின் புகழ் உலகளாவிய புகழாக நிலைத்து நிற்க, லண்டன் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில், பெரியாரின் படத்தை திறந்து வைத்து பெருமைப்படுத்தியுள்ளார். முதலமைச்சர் நினைவெல்லாம் பெரியாதான். தற்போது, பெரியார் வைக்கம் போராட்டத்தில் முதன்முதல் 22.4.1924 அன்று கைது செய்யப்பட்டு, ஒரு மாத காலம் அடைக்கப்பட்டிருந்த இந்த ஆறுகுட்டி சிறையை பெரியார் நினைவகமாக ரூ.3.99 கோடியில், 1141 சதுரடி பரப்பளவில், ஐந்து மாதகாலத்தில் அமைக்கப்படுகிறது. இந்த நினைவகத்தில், மாதிரி சிறை அமைப்பு, புகைப்பட கண்காட்சி அரங்கம், பெரியாரின் சிலை ஆகியவை இடம் பெறுகின்றன. இவ்வாறு அவர் கூறினார். விழாவில், கேரள மாநில ஆலப்புழா நாடாளுமன்ற உறுப்பினர் கே.சி.வேணுகோபால், அரூர் சட்டமன்ற உறுப்பினர் தலீமா ஜோ ஜோ, ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் அலெக்ஸ் வர்கீஸ், உள்பட பலர் கலந்து கொண்டனர்.