Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

மூன்று வாரங்கள் கொட்டி தீர்த்த கனமழை: பேரழகு மூணாறை சிதைத்த பேரழிவு நிகழ்வுக்கு வயது ‘100’

* காட்டாற்று வெள்ளத்தில் தனித்தீவான அவலம்

* மூணாறில் நாளை முதல் 3 நாட்கள் கண்காட்சி

மூணாறு: மூணாறில் பேரழிவை ஏற்படுத்திய வெள்ளப்பெருக்கு துயர சம்பவம் நிகழ்ந்து 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதனையொட்டி நாளை முதல் 3 நாட்கள் புகைப்பட கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடைபெற உள்ளது. தென்னகத்து காஷ்மீர் என்று அழைக்கப்படும் மூணாறு, முற்றிலும் வனப்பகுதி, மலைகளால் சூழப்பட்டுள்ளது. இதனாலேயே கேரள மாநிலத்தில் பிற பகுதிகளை விட மூணாறில் அதிகளவில் மழை கொட்டித் தீர்க்கும். ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை ஜூனில் துவங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். அதிக மழை பெய்யும் நேரங்களில் இங்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படும் என்றபோதும் 1924ல் ஏற்பட்ட பெரும் பேரழிவு மறக்க முடியாதது. மூணாறில் பருவமழை சராசரியாக 400 முதல் 450 செமீ வரை பெய்யும். ஆனால் 1924ல் ஜூலையில் மட்டும் 591.3 செ.மீ., மழை பெய்ததாக கூறப்படுகிறது. ஜூலை 14ம் தேதி தொடங்கிய சாரல் மழை வலுவடைந்து 3 வாரங்கள் கொட்டி தீர்த்தது.

இரவு, பகல் பாராது இடைவிடாமல் பெய்த கனமழையால் மூணாறில் பல எஸ்டேட் பகுதிகளுக்கு செல்லும் சாலைகள் இடிந்து தனிமைப்படுத்தப்பட்டன. மேலும், எஸ்டேட் பகுதிகளிலும் நிலச்சரிவு ஏற்பட்டு தொழிலாளர்கள் வசிக்கும் லைன்ஸ் வீடுகள் மண்ணுக்குள் புதைந்தன. இதில் 110 தொழிலாளர்கள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மேலும், மூணாறு அருகே மாட்டுப்பட்டி மற்றும் பெரியவாரை போன்ற பகுதிகளில் மலைகளுக்கு இடையே மண் சரிவு ஏற்பட்டு மரங்கள், கற்கள் ஆகியவை சிக்கி திடீர் தடுப்பணைகள் உருவாகின. இவை உடைந்து ஏற்பட்ட வெள்ளப் பெருக்கில் மூணாறு நகர் தண்ணீரில் முழுவதுமாக மூழ்கி அழிந்தது. தற்போது உள்ள ஹெட்ஒர்க்ஸ் அணையின் அருகே உள்ள பெரிய மலை குன்று இடிந்து விழுந்தது. இதனால் மூணாறு முழுவதும் தண்ணீரில் மூழ்கியது. குண்டலை பகுதிகளிலும் தடுப்பணைகள் உருவாகி அவை உடைந்து பெரும் சேதங்களை ஏற்படுத்தியது.

தேயிலை தோட்டங்களை நிர்வகித்த ஆங்கிலேயர்கள், சரக்குகளை கொண்டு செல்ல பயன்படுத்திய மூணாறு - டாப் ஸ்டேஷன் இடையே இயக்கப்பட்ட குண்டளைவாலி ரயில் பாதை, ரயில்வே ஸ்டேஷன் ஆகியவை இருந்த இடம் தெரியாத அளவிற்கு முற்றிலுமாக சேதமடைந்தன. பல தேயிலை தொழிற்சாலைகள், குடியிருப்புகள் கட்டிடங்கள், தொலை தொடர்பு வசதி, மின்கம்பங்கள் சேதமடைந்தன. மாங்குளம் பகுதியில் கரிந்திரி மலை இடிந்து எர்ணாகுளம் மாவட்டம் ஆலுவாவில் இருந்து மூணாறுக்கு வந்த ரோடு முற்றிலுமாக சேதமடைந்து துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு 1931ல் மூணாறில் இருந்து நேரியமங்கலம் வழியாக புதிய ரோடு அமைக்கப்பட்டது. அதேபோல் பேரழிவுக்கு பின்புதான் மூணாறில் இருந்து கேப் ரோடு வழியாக போடிமெட்டுக்கு ரோடு அமைக்கப்பட்டது. மழையில் சேதமடைந்த ரயில் தண்டவாளங்களை ஆங்கிலேயர்கள் மின்கம்பங்களாக பயன்படுத்தினர்.

அவை மூணாறிலும், சுற்றிலும் உள்ள எஸ்டேட் பகுதிகளிலும் இன்றும் சாட்சியங்களாக உள்ளன. மலையாள மாதம் கொல்லம் வருடம் 1099ல் இந்த பேரழிவு நடந்துள்ளதால் இதை 99ல் பிரளயம் என்று கூறுகின்றனர். அந்த துயர சம்பவம் நடந்து தற்போது 100 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. 1924ல் பெய்த கனமழையில் பேரழிவு ஏற்பட்டு தற்போது 100 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இதனை அனுசரிக்கும் விதமாக மூணாறு அரசு பொறியியல் கல்லூரி மற்றும் அரசு உயர்நிலை பள்ளிகளில் ஜூலை 17, 18, 19 ஆகிய தேதிகளில் புகைப்பட கண்காட்சி, கருத்தரங்கம் ஆகியவை நடைபெறவுள்ளது. அதில் மூணாறு பேரழிவு சம்பவம் தொடர்பான குறும்படமும் திரையிடப்படவுள்ளது.