Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

திருப்புவனம் அருகே 12ம் நூற்றாண்டு கல்வெட்டு, சிலைகள் கண்டெடுப்பு: புதைந்துபோன பெருமாள் கோயில் குறித்து தகவல்

திருப்புவனம்: திருப்புவனம் அருகே, அம்பலத்தாடி கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பிற்காலப் பாண்டியர் காலத்தைச் சேர்ந்த பெருமாள் கோயில் கல்வெட்டு மற்றும் சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதில், பழமையான கோயில் அழிந்ததும், புதுப்பிக்கப்பட்டதும் குறித்த தகவல் வெளியாகியுள்ளன. தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி, மதுரை காமராசர் பல்கலைக்கழக சமயங்கள், தத்துவம் மற்றும் மனிதநேயச் சிந்தனைப்புல முதுகலை மாணவர் வினோத் ஆகியோர் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே அம்பலத்தாடி கிராமத்தில் கள ஆய்வு செய்தனர். அப்போது புதைந்துபோன கோயில் கல்வெட்டு, சிலைகளை கண்டறிந்தனர். இது குறித்து அவர்கள் கூறியதாவது: சிவகங்கை மாவட்டத்திற்கு உட்பட்ட அம்பலத்தாடி கிராமத்தில் கி.பி.12ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிதைந்த பாண்டியர் காலக் கல்வெட்டு, பெருமாள், தேவி, பூதேவி, கருடாழ்வார் உள்ளிட்ட 10 வகையான சிலைகள், சிதைந்து உருக்குலைந்து போன நிலையில் கண்டறியப்பட்டுள்ளது.

அம்பலத்தாடி கிராமம் பாண்டியர்களின் ஆட்சி காலத்தில், சதுர்வேதி மங்கலமான பிராமணக் குடியிருப்பாக இருந்துவந்துள்ளது. இவர்கள் இப்பகுதியில் உள்ள பெருமாள் கோயிலை வழிபட்டும் பராமரித்தும் வந்திருக்கின்றனர். அவர்கள் காலப்போக்கில் இடம்பெயர்ந்து சென்றதாலும் பிற காரணங்களாலும் இக்கோவில் வழிபாடின்றி சிதலமடைந்துவிட்டதை அறிய முடிகிறது. இக்கோயில் மூலவரான பெருமாள் சிலை, சிதைந்த நிலையில் 72 செ.மீ உயரம், 38 செ.மீ அகலத்துடன் காணப்படுகிறது. தலைப்பகுதிக்கு மேல் சேதமடைந்துள்ளது. இந்த சிலையில் பின்னிரு கைககளில் சங்கு, சக்கரம் உள்ளது. வலது முன்கை அபய முத்திரையுடனும், இடதுமுன்கை கட்டிய வலம்பித முத்திரையுடனும் காணப்படுகிறது. தேவி, பூதேவி சிலைகள் முற்றிலும் சிதைந்துள்ளன. கழுத்தணிகள், கையணிகள், தோளணிகளுடன் சிலை வடிக்கப்பட்டுள்ளது.

தலையில் கிரீடத்துடன் கூடிய கருடாழ்வார் சிலை, தொடைக்குக் கீழ்ப்பகுதி முற்றிலும் சிதைந்த நிலையில் கிடைக்கிறது. கோயிலின் சிதைந்த பாகங்கள் ஊரில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. கி.பி.12ம் நூற்றாண்டு எழுத்தமைதியுடன் கூடிய 2 வரி துண்டு கல்வெட்டு, உடைந்து உருக்குழைந்து போய் காணப்படுகிறது. ‘ஒன்று’ என்ற சொல்லைத் தவிர வேறு எதையும் படிக்க இயலவில்லை. இங்கு மேற்கொண்ட ஆய்வில் இரண்டு பெருமாள் சிலைகள், இரண்டிரண்டு தேவி, பூதேவி சிலைகள் கிடைப்பதாலும் அவை வெவ்வேறு காலகட்டத்தைச் சேர்ந்தவையாக இருப்பதாலும், முன்பு இங்கிருந்த பெருமாள் கோயில் அழிவுற்றதால் அது புதுப்பிக்கப்பட்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட அக்கோயில் மீண்டும் அழிவுற்றது என்பதை அறிய முடிகிறது’ என்றனர். மேலும், கோயில் சிதைவு பற்றிய ஆய்வு தொடர்வதாக தெரிவித்தனர்.