சென்னை: வள்ளலாரின் பிறந்தநாளை முன்னிட்டு, நேற்று ஆளுநர் மாளிகையில், திருவருட்பா - ஆறாம் திருமுறை எனப்படும் புத்தகத்தை வெளியிட்டு, திருவருட்பா பியாண்ட் தி பார்டர்ஸ் எனப்படும் திட்டத்தையும் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி துவங்கி வைத்தார். முன்னதாக ராஜ்பவனில் உள்ள வள்ளலார் பூங்காவில் வள்ளலார் சிலைக்கு மாலை அணிவித்த ஆளுநர் ஆர் என் ரவி, மாணவர்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்ட வள்ளலார் சன்மார்க கண்காட்சியை பார்வையிட்டு, மாணவர்களுடன் பேசினார்.
நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசுகையில், ‘‘நான் மாநிலம் முழுவதும் பயணிக்கும் போது, தமிழ்நாடு போராடும் என்று சுவர்களில் எழுதியுள்ளதை பார்த்தேன். தமிழ்நாடு யாருடன் போராடும்? தமிழ்நாட்டை எதிர்த்து யாரும் போராடவில்லை. நாம் அனைவரும் சகோதர சகோதரிகள். இதெல்லாம் நம் மனதை விட்டு செல்ல வேண்டும். நம்முள் சண்டைகள் இல்லை, பிரச்னைகள் இல்லை. நாம் நிச்சயமாக ஒன்றிணைந்து வாழ வேண்டும்’’ என்றார்.