தமிழகத்தில் தனியார் பல்கலைக்கழகங்கள் நிறுவுவதற்கு உள்ள நிபந்தனைகளை தளர்த்துவது தொடர்பான சட்ட திருத்த மசோதா: அமைச்சர் கோ.வி.செழியன் தாக்கல்
சென்னை: சட்டப் பேரவையில் நேற்று, தமிழ்நாடு தனியார் பல்கலைக்கழக சட்டத் திருத்த மசோதாவை உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் அறிமுகம் செய்தார். மசோதாவில் கூறியிருப்பதாவது: மாநிலத்தில் தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவுவதற்கான கொள்கை நெறிகளை எளிமைப்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.சிறுபான்மையினரல்லாத தனியார் பல்கலைக்கழகங்கள் 65 சதவீத இடங்களையும், சிறுபான்மையினர் தனியார் பல்கலைக்கழகம் என்றால் 50 சதவீத இடங்களையும், மருத்துவம், பல்மருத்துவம், மருத்துவம் சார்ந்த துணைப் பாடப்பிரிவுகள் மற்றும் இந்திய மருத்துவப் பாடப்பிரிவுகளுக்கு ஏற்றபடி அரசுக்கு ஒதுக்க வேண்டும்.
இளநிலை மருத்துவம், அறுவை சிகிச்சை, இளநிலை பல்மருத்துவம் போன்றவை அதில் உள்ளடங்கும். இவை மட்டுமல்லாமல், அரசு அறிவிக்கும் இளநிலை, முதுநிலையிலான வேறு பாடப்பிரிவுகளும் அதில் உள்ளடங்கும். ஒவ்வொரு தனியார் பல்கலைக்கழகத்திலும் ஒதுக்கப்பட்ட அரசு இடங்களுக்கான மாணவர் சேர்க்கை, நடைமுறையில் உள்ள சட்டத்தின்படி, இடஒதுக்கீட்டு விதிகளை பின்பற்றி மேற்கொள்ளப்படும். கல்லூரி நிலையில் இருந்து பல்கலைக்கழகமாக மாறும் அரசு உதவி பெறும் நிறுவனங்கள், அரசுப் பணியிடங்களில் உள்ளவர்களுக்கான பணி நிபந்தனைகளை குறைக்கக் கூடாது. பல்கலைக்கழகமாக மாற்றப்படும் அந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும், படிப்பை முடிக்க அனுமதிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த மசோதாவை அதிமுக கட்சி சார்பில் ஆரம்ப நிலையில் எதிர்ப்பதாக அன்பழகன் எம்எல்ஏ தெரிவித்தார்.