ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு ஆதார் விவரம் கேட்கவில்லை; ஓடிபி பெற தடை நீக்க வேண்டும்: திமுக மனுக்கள் மீது ஐகோர்ட் கிளை இன்று விசாரணை
மதுரை: ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கைக்கு ஆதார் விவரம் எதுவும் கேட்கவில்லை, தவறான தகவலை கொடுத்து ஓடிபி பெற தடை வாங்கியுள்ளனர், அதை நீக்க வேண்டும் என்று திமுக தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீது இன்று விசாரணை நடத்தப்படும் என ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தைச் சேர்ந்த ராஜ்குமார், திமுகவினரின் ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரிலான உறுப்பினர் சேர்க்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தாக்கல் செய்த மனுவை விசாரித்த ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், மரியா கிளெட் ஆகியோர், ‘‘ஓரணியில் தமிழ்நாடு என்னும் பெயரில் உறுப்பினர் சேர்க்கையை நடத்தலாம். ஆனால், ஓடிபி விபரங்களை கேட்கக் கூடாது. மனுவிற்கு ஒன்றிய, மாநில அரசுகள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய வேண்டும்’’ என உத்தரவிட்டனர்.
இந்நிலையில், ஐகோர்ட் கிளை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளெட் ஆகியோர் முன் திமுக பொதுச்செயலாளர் தரப்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன், ஓரணியில் தமிழ்நாடு நிகழ்வின் மானாமதுரை தொகுதி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வினோத் சார்பில் மூத்த வழக்கறிஞர் லஜபதிராய் ஆகியோர் நேற்று ஆஜராகினர். அப்போது, ‘‘ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்திற்கு எதிரான மனுவின் மீது பிறப்பிக்கப்பட்ட இடைக்கால உத்தரவை எதிர்க்கும் எங்களது மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும். ஓரணியில் தமிழ்நாடு இயக்க நிகழ்விற்காக ஆதார் விபரங்கள் எதையும் வாங்கவில்லை. அதிமுக தரப்பில் ஆதார் எண்ணை பயன்படுத்தி ஓடிபி பெறுவதாக தவறான தகவலை நீதிமன்றத்தில் தெரிவித்து உத்தரவு பெற்றுள்ளனர்.
தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் அடிப்படையில் தான் உறுப்பினர் சேர்க்கை நடக்கிறது. உறுப்பினர் சேர்க்கைக்கு சம்மதம் பெறுவதற்காகவே ஓடிபி அனுப்பப்படுகிறது. வேறு எந்த ஆவணத்தையும் யாரிடமும் வாங்கவில்லை. தவறான தகவலை அளித்து, மனு செய்துள்ளனர். ஐகோர்ட் கிளை உத்தரவால், தற்போது உறுப்பினர் சேர்க்கை பணி நிறுத்தப்பட்டுள்ளது. எங்களது மனுவை அவசர வழக்காக உடனடியாக விசாரணைக்கு எடுக்க வேண்டும்’’ என்றனர்.
அப்போது நீதிபதிகள், ‘‘பொதுச்செயலாளர் தரப்பு பதில் மனு, இடையீட்டு மனுவை தாக்கல் செய்யலாம். அது ஜூலை 23 (இன்று) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்’’ என்று கூறினர். இதையடுத்து திமுக பொதுச்செயலாளர் தரப்பில் பதில்மனு மற்றும் தடையை நீக்கக் கோரும் மனுவும், வழக்கறிஞர் வினோத் தரப்பில் இடையீட்டு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனுக்கள் இன்று விசாரணைக்கு வரவுள்ளன.