*சிறப்பு தணிக்கை கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
தோகைமலை : தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சியில் சிறப்பு தணிக்கை கிராமசபை கூட்டம் நடந்தது.கரூர் மாவட்டம் தோகைமலை அருகே நாகனூர் ஊராட்சியில் சமூக தனிக்கை இறுதி செய்தல் சிறப்பு கிராமசபை கூட்டம் நடந்தது. நாகனூர் ஊராட்சி பரந்தாடி பெரியக்காண்டியம்மன் கோயில் ஆலமரத்தடியில் கிராம சபை கூட்டம் நடந்தது.
மூத்த குடிமகன் காளிமுத்து தலைமை வகித்தார். ஒன்றிய பணிமேற்வையாளர் விஜயராணி, 100 நாள் திட்ட துணை வட்டார வளர்ச்சி அலுவலர் விவேகானந்தன் முன்னிலை வகித்தனர். முன்னதாக நாகனூர் ஊராட்சி மன்ற செயலாளர் பாலமுத்து வரவேற்றார்.
இதில் நாகனூர் ஊராட்சி பகுதிகளில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம் 2024 மற்றும் 2025 ம் நிதி ஆண்டின் செயல்பாடுகள் குறித்து சமூக தனிக்கையாளர்களை கொண்டு கடந்த வாரம் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் முதல் நாள் ஆய்வு பணியாக நாகனூர் கிராம ஊராட்சி அலுவலகத்தில் தனி அலுவலர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர், ஒன்றிய பணிமேற்பார்வையாளர், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், கிராம வறுமை ஒழிப்புச் சங்க பிரதிநிதிகள் மற்றும் தன்னார்வலர்களை கொண்டு ஒருங்கிணைப்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதனை தொடர்ந்து பதிவேடுகள் ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் அனைத்து ஆவணங்களும் சரிபார்க்கப்பட்டு அன்று மாலையே விழிப்புணர்வு கூட்டம் நடத்தப்பட்டது.
2வது நாள் அன்று நாகனூர் கிராமத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் வீடு வீடாக சென்று பயணாளிகளை நேரில் சந்தித்து 100 நாள் வேலை அடையாள அட்டைகளை ஊராட்சி மன்ற ஆவணங்களுடன் ஒப்பீடு செய்து பார்க்கப்பட்டது. 3வது நாள் அன்று கள ஆய்வு செய்தல், பணிகள் செய்த இடங்களில் அளவீடுகள் எடுத்தல், கள ஆய்வில் சேகரிக்கப்பட்ட தகவல்களை அலுவலகத்தில் உள்ள ஆவணங்களுடன் ஒப்பீடு செய்து சரிபார்த்தல் போன்ற பணிகள் நடந்தது.
4வது நாள் அன்று பதிவேடுகள் மற்றும்; கள ஆய்வில் கண்டறியப்பட்ட தகவல்களை அறிக்கைகளாக தயார் செய்யப்பட்டது. 5வது நாளான நேற்று சிறப்பு கிராமசபைக் கூட்டம் நடந்தது. இதில் கள அலுவலர் ஆய்வு செய்யப்பட்ட ஆவணங்களில் இருந்து பல்வேறு கேள்விகள் கேட்கும் போது ஊராட்சி மன்ற செயலாளர் பாலமுத்து பதிலளித்தார்.
பின்னர் கிராம சபை கூட்டத்தின் நிகழ்வுகளை பதிவேற்றம் செய்து தணிக்கை அறிக்கை இணைதளத்தில் பதிவு செய்யப்பட்டது. மேலும் அறிக்கைகளை கிராம சபையில் ஒப்புதல் பெற்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்து பேசினர். இதில் தற்போது குறைந்த பணியாளர்களை கொண்டு 100 நாள் பணிகள் செய்கின்றனர். இதனால் நாகனூர் ஊராட்சி பொதுமக்களுக்கு தொடர்ந்து 100 நாள் வேலைகளை வழங்க வேண்டும்.
இதேபோல் நாகனூர் பகுதிகளில் பெரும்பாலான பகுதிகளில் தெரு விளக்குகள் எரியாமல் பழுதாகி உள்ளது. இதனால் இரவு நேரங்களில் விசப்பூச்சிகள் மூலம் பொதுமக்களுக்கு ஆபத்து ஏற்பட்டு வருகிறது. மேலும் பெரும்பாலான கிராமங்களில் பைப்லைன்களில் பழுது ஏற்பட்டு குடிநீர் சரியாக வரவில்லை. ஆகவே தெருவிளக்குள், குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து பேசினர். இந்த கூட்டத்தில் பணித்தளப் பொறுப்பாளர்கள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.