சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்படுகிறார் சேலம் அருள் எம்எல்ஏ.வை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும்: அன்புமணி சார்பில் வழக்கறிஞர் கே.பாலு டிஜிபி அலுவலகத்தில் புகார்
சென்னை: சமூக வலைதளங்களில் வன்முறையை தூண்டும் வகையில் செயல்பட்டு வரும் சேலம் அருள் எம்எல்ஏவை குண்டர் தடுப்பு சட்டதின் கீழ் கைது செய்ய வேண்டும் என பாமக அன்புமணி அணி சார்பில் வழக்கறிஞர் கே.பாலு நேற்று டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். தமிழ்நாடு காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில் பாமக அன்புமணி அணி சார்பில் வழக்கறிஞர் கே.பாலு நேற்று புகார் ஒன்று அளித்தார். அதன் பிறகு கே.பாலு நிருபர்களிடம் கூறியதாவது:
சேலத்தில் வாழப்பாடி அருகே இரு தரப்பில் நடந்த மோதலில் 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. எங்களுடையே தரப்பில் 7 பேர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். ஆனால், சேலம் அருள் தொடர்ந்து வெளியே நடமாடி வருகிறார். சமூக வலைதளங்களில் சவால் விடும் விதமாகவும் வன்முறையை தூண்டும் விதமாகவும் செயல்பட்டு வருகிறார். இது சட்டம்- ஒழுங்கு பிரச்னையை ஏற்படுத்துவதாக உள்ளது.
எங்கள் தரப்பில் மட்டும் கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இவை அனைத்தும் ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாக உள்ளது. பாமக தொண்டர்களுக்கு உரிய பாதுகாப்பு இல்லை. தொடர் குற்றத்தில் ஈடுபட்டு வரும் அருளை குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும். அருள் நேற்று இரவு நான் யாரை சொல்கிறேனோ அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் போடுவார்கள் என பேசி இருக்கிறார். இதுதொடர்பாக காவல்துறையினரும் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த விவகாரம் தொடர்பாக முறையான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் மிகப் பெரிய ஆர்ப்பாட்டத்தை பாமக நடத்தும். அருளுக்கு காவல்துறை பாதுகாப்பு வழங்குவது என்பது தேவையில்லாத ஒன்று. பிரச்னை தொடர்பாக காவல்துறை 2 எப்ஐஆர் போடப்பட்டிருக்கிறது. ஆனால் அருள் வெளியே சுற்றி வருகிறார். முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் இரண்டு தரப்பிலுமே குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
