சேலம்: சேலம் காமலாபுரம் விமான நிலையத்தில் இருந்து சென்னைக்கு இண்டிகோ விமான சேவையும், பெங்களூரு, ஐதராபாத், கொச்சி ஆகிய நகரங்களுக்கு அலையன்ஸ் ஏர் விமான சேவையும் உள்ளது. இந்த விமானங்களை சேலம் மட்டுமின்றி சுற்றியுள்ள நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை சேர்ந்த தொழிலதிபர்கள், வியாபாரிகள், கல்லூரி மாணவர்கள் பெரிதும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த விமானங்களின் இயக்க நேரம் வரும் 26ம் தேதி முதல் குளிர்காலத்திற்கான இயக்க நேரமாக மாற்றி அமைப்பதாக சேலம் விமானநிலைய நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை-சேலம் விமானம் வரும் 26ம் தேதி முதல், சென்னையில் பிற்பகல் 2.10 மணிக்கு புறப்பட்டு, சேலத்திற்கு பிற்பகல் 3.20 மணிக்கு வந்து சேரும்.
மறுமார்க்கத்தில், சேலம்-சென்னை விமானம் வரும் 26ம் தேதி முதல் சேலத்தில் பிற்பகல் 3.40 மணிக்கு புறப்பட்டு, சென்னைக்கு மாலை 4.55 மணிக்கு சென்றடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த சென்னை-சேலம் விமானம் பிற்பகல் 3.50க்கு புறப்பட்டு மாலை 5 மணிக்கு வரும் வகையிலும், சேலம்-சென்னை விமானம் மாலை 5.20 மணிக்கு புறப்பட்டு மாலை 6.10மணிக்கு சென்றடையும் வகையிலும் இயக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.