Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
x
Chettinad Cements
search-icon-img
Advertisement

பெரம்பூர் அருள்மிகு சேமாத்தம்மன் திருக்கோயிலில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் திருப்பணிகள்: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் கே.சேகர்பாபு நேரில் ஆய்வு

சென்னை: இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு இன்று (19.11.2025) சென்னை, பெரம்பூர் அருள்மிகு சேமாத்தம்மன் திருக்கோயிலில் ரூ. 1.50 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று வரும் அனைத்து சன்னதிகள் புனரமைப்பு, பொங்கல் மண்டபம், முன்மண்டபம் மற்றும் திருக்குளம் சீரமைப்பு ஆகிய திருப்பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடித்திட அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

பின்னர், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:

தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு ஏற்பட்ட பிறகு இந்து சமய அறநிலையத் துறையில் பல்வேறு திருப்பணிகளும், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில், பெரம்பூர் அருள்மிகு சேமாத்தம்மன் திருக்கோயிலுக்கு ஆடி மாத உற்சவம் போன்ற திருவிழா நாட்களில் ஆயிரக்கணக்கான மக்கள் திருக்கோயிலுக்கு வந்து வழிபடுவது வழக்கமாகும். இத்திருக்கோயிலில் போதிய நிதி இல்லாத சூழ்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் மற்றும் திரு.வி.க.நகர் சட்டமன்ற உறுப்பினர் ஆகியோரின் சீரிய முயற்சியினால் உபயதாரர்கள் மூலம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் அனைத்து சன்னதிகளையும் புனரமைத்தல், பொங்கல் மண்டபம் மற்றும் முன்மண்டபம் கட்டுதல் திருக்குளம் சீரமைத்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சாதி, மதங்களுக்கு அப்பாற்பட்டு அனைத்துத் தரப்பு மக்களும் இத்திருக்கோயிலை புனரமைக்க தாமாகவே முன்வந்து நிதியுதவி அளித்துள்ளனர். அதன்படி நடைபெற்று வரும் திருப்பணிகளை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்ததோடு விரைந்து முடித்திடவும் அறிவுறுத்தியுள்ளோம்.

சபரிமலைக்கு செல்லும் தமிழ்நாட்டு ஐயப்ப பக்தர்களுக்கு உதவிடும் வகையில் ஆணையர் அலுவலகத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையிலும், சபரிமலையிலும் 24 மணி நேரமும் இயங்கும் தகவல் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு அலுவலர்கள் சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் குமுளியில் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது.

சபரிமலைக்கு வரும் ஐயப்ப பக்தர்கள் ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ள வேண்டுமென திருவாங்கூர் தேவஸ்தானம் அறிவிப்பு செய்துள்ளது.நாளொன்றுக்கு ஆன்லைன் மூலம் பதிவு செய்துள்ள 90 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.பதிவு செய்யாத பக்தர்கள் ஆயிரக்கணக்கில் செல்லுகின்ற போது கூட்டத்தை கட்டுப்படுத்த இயலாத சூழ்நிலை இருக்கின்றது. ஆகவே, ஆன்லைனில் பதிவு செய்தபின் சபரிமலைக்கு வந்தால் சிறப்பாக இருக்கும் என அந்த மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இந்நிலையை ஒரிரு நாட்களில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து விடுவார்கள் என்று நினைக்கின்றேன்.

திருப்பரங்குன்றம் மலையில் கார்த்திகை தீபம் ஏற்றுவது தொடர்பாக வழக்கு நீதிமன்றத்தில் விரைவில் விசாரணைக்கு வர இருக்கின்றது. மதத்தால், இனத்தால், மொழியால் மக்களை பிளவுப்படாமல் சகோதரத்துவத்தோடு அமைதியாக வாழ வேண்டும் என்று நினைக்கின்ற ஆட்சி இந்த ஆட்சியாகும். ஆனால் இவற்றை கொண்டு மக்களை பிளவுப்படுத்த நினைக்கின்றவர்களின் சதிகள் நிச்சயமாக இந்த ஆட்சியில் முறியடிக்கப்படும். நான்கு மாதத்திற்கு முன்பே அங்கு முருகர் பக்தர் மாநாடு என்ற பெயரில் சங்கிகள் நடத்திய மாநாட்டில் ஏற்பட்ட பல சூழ்ச்சிகளை இந்த அரசும் காவல்துறையும் திறமையோடு சமாளித்ததை நீங்கள் அறிவீர்கள். எல்லாம் வல்ல இறைவனும், அல்லாவும் ஒன்றாகவே பயணித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆகவே சமூகமான ஒரு சூழல் ஏற்பட்டு, சட்டம் ஒழுங்கு எந்த வகையிலும் பாதிக்காத அளவிற்கு அரசும் காவல்துறையும் செயல்படுவார்கள். மேலும், நீதிபதிகளும் அதற்கேற்றார்போல் உத்தரவுகளை வழங்குவார் என்று நம்புகிறோம்.

திருவண்ணாமலை கார்த்திகை தீபத்தை பொறுத்தளவில் கடந்த ஆண்டு விட இந்த ஆண்டு 20% மக்கள் கூடுதலாக வருகை தருவார்கள் என எதிர்பார்க்கின்றோம். ஆகவே அனைத்து முன்னேற்பாடுகளையும், சிறப்பாக முறையில் செய்திருக்கிறோம். கடந்தாண்டை விட அதிக இடங்களில் மருத்துவ முகாம்கள், கண்காணிப்பு கோபுரங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாண்புமிகு பொதுப்பணித்துறை அமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியினால் தேரோடும் வீதிகள் கான்கிரீட் சாலைகளாக அமைக்கப்பட்டுள்ளதோடு, உயர்மின் மின்சாரக் கம்பிகள் புதைவடக் கம்பிகளாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், கிரிவலப் பாதையில் சி.எஸ்.ஆர் நிதி, பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை நிதி மற்றும் இந்து சமய அறநிலைத்துறை நிதியின் மூலம் சுமார் 13 இடங்களில் கழிப்பிட வசதிகளும், 4 இடங்களில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. தீபம் ஏற்றும் மலை உச்சிக்கு கொப்பரை எடுத்துச் செல்லும் நபர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மலையின் உறுதித் தன்மையை பொறுத்து மலை மீது ஏற பக்தர்களை அனுமதிப்பது குறித்து பரிலீசிக்கப்படும். தீபத்திருவிழாவிற்காக துறையின் சார்பில் கூடுதல் ஆணையர்கள், இணை ஆணையர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

முதலமைச்சர் தமிழ்நாட்டிற்கு வருகைதரும் முக்கிய பிரமுகர்களுக்கு வரவேற்பு அளிப்பதிலும், மாற்றாரை மதிப்பதிலும், அவருக்கு இணையாக எவரையும் பார்க்க முடியாது. பணிவு, அன்பு, துணிவு இதை மூன்றும் ஒருங்கே சேர்ந்தவர் அவர். எவரையும் ignore செய்வது எங்கள் முதல்வரின் எண்ணம் அல்ல. மாண்புமிகு பிரதமர் அவர்களை வரவேற்க பணி சுமையின் காரணமாக முதலமைச்சர் செல்ல இயலாத நிலையில் புரோட்டகால்படி நிச்சயமாக அமைச்சர்களை அனுப்பி வைப்பார்.

முதலமைச்சரின் உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களுக்கு அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வருகை தரும் திருவிழாக்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகளின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில் கடந்த 13.11.2025 அன்று இந்து சமய அறநிலையத்துறை உயர் அலுவலர்கள், காவல்துறை தலைமை இயக்குநர் (பொறுப்பு), கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் (சட்ட ஒழுங்கு), காவல்துறை தலைவர் ஆகியோரின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பல்வேறு முன்னெடுப்புகளை முடிவு செய்திருக்கின்றோம். அதன் தொடர்ச்சியாக இன்னும் இரண்டு வாரங்களில் மற்றொரு கூட்டத்தை நடத்த இருக்கின்றோம். அதில் மேற்கொள்ளப்படும் முடிவுகள் படிப்படியாக செயல்பாட்டு கொண்டு வரப்படும் என்று தெரிவித்தர்.

இந்நிகழ்ச்சியில் பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், திரு.வி.க. நகர் சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, இணை ஆணையர் ஜ.முல்லை , மாநகராட்சி மண்டல குழுத் தலைவர் சரிதா மகேஷ்குமார், மாநகராட்சி உறுப்பினர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.