*மாவட்ட அலுவலர் தொடங்கிவைத்தார்
ராணிப்பேட்டை : ராணிப்பேட்டை அரசு பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளை மாவட்ட மாற்றுத்திறனாளி நல அலுவலர் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் அனைத்து மாவட்ட மற்றும் மண்டல அளவில் கடந்த மாதம் 22ம் தேதி தொடங்கியது.
வரும் டிசம்பர் 12ம் தேதி வரை நடைபெற உள்ள இப்போட்டியில், ஒவ்வொரு மாவட்டத்திலும் 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும், 12 வயது முதல் 19 வயதிற்குட்பட்ட பள்ளி மாணவர்களுக்கும், 17 வயது முதல் 25 வயதிற்குட்பட்ட கல்லூரி மாணவர்களுக்கும், 15 வயது முதல் 35 வரையிலான பொதுப் பிரிவினருக்கும், அனைத்து வயது மாற்றுத்திறனாளிகளுக்கும், அரசு ஊழியர்களுக்கும் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
இதில் மாவட்ட அளவில் 25 வகையான விளையாட்டு போட்டி களும், மண்டல அளவில் 7வகையான விளையாட்டுப்போட்டிகளும்,மாநில அளவில் 37 வகையான விளையாட்டு போட்டிகளும் நடத்தப்படுகிறது.
இப்போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.25 ஆயிரம் வரை என ரூ.37 கோடி மொத்த பரிசு தொகை வழங்கப்பட உள்ளது. அதன்படி, ராணிப் பேட்டை மாவட்டத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு நடைபெற்று வருகிறது.
அதன்படி நேற்று முதலமைச்சர் கோப்பை மாற்றுத்திறனாளிகளுக்கான போட்டிகள் ராணிப்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளி மைதானத்தில் தடகளம் மற்றும் சிறப்பு கையுந்து பந்து போட்டியையும் நடந்தது.
இதில் இறகுப்பந்து பயிற்சி மையத்தில் இறகுப்பந்து மற்றும் மேசைப் பந்து போட்டியை ராணிப்பேட்டை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்தராம்குமார் துவக்கி வைத்தார். இப் போட்டியில் 350 க்கும் மேற்பட்ட மாற்று திறனாளிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் ஞானசேகரன், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் உடற் கல்வி இயக்குனர்கள், உடற்கல்வி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.