Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
Chettinad cements
search-icon-img
Advertisement

ரயில்வே கேட் திடீரென பழுது பாவூர்சத்திரத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்

*வாகன ஓட்டிகள், மாணவர்கள் அவதி

பாவூர்சத்திரம் : பாவூர்சத்திரம் ரயில்வே கேட் திடீரென்று பழுதானதால் கடுமையான போக்குவரத்து நெரிசலால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலை பணிகள் கடந்த 4 ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்று வருகிறது. இதில் பாவூர்சத்திரத்தில் ரயில்வே கேட் பகுதியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரயில்வே கேட் அருகில் பில்லர்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதால் தென்காசிக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் பாவூர்சத்திரத்தில் இருந்து கடையம் சாலை வழியாக திப்பணம்பட்டி, ஆரியங்காவூர், கல்லூரணி வழியாக செல்வவிநாயகர்புரம் சென்று அங்கிருந்து மீண்டும் நான்கு வழிச்சாலையில் இணைந்து தென்காசி சென்று வருகின்றன.

அதேபோன்று தென்காசியில் இருந்து பாவூர்சத்திரம், ஆலங்குளம் வழியாக நெல்லை செல்லும் வாகனங்கள் அனைத்தும் செல்வவிநாயகர்புரத்திலிருந்து வடக்கு பகுதி வழியாக ரயில்வே சுரங்க பாதை பகுதியை கடந்து மேலப்பாவூர் செல்லும் சாலை வழியாக பாவூர்சத்திரம் ரயில்வே கேட் கீழ்புறம் வந்து பேருந்து நிலையம் வழியாக வாகனங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சிறிய இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அனைத்தும் ரயில்வே கேட் வழியாக சென்று வருகிறது.

இந்நிலையில் நேற்று காலை நெல்லை - செங்கோட்டை ரயில் வருகைக்காக நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலையில் உள்ள ரயில்வே கேட் அடைக்கப்பட்டது. ரயில் சென்ற பிறகு ரயில்வே கேட் திறக்கப்படும் போது கேட் திடீரென பழுதானது. இதனால் நெல்லை - தென்காசி நான்கு வழிச்சாலையில் இருபுறமும் கனரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் உட்பட பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நின்றன. இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

தென்காசியில் இருந்து வாகனங்கள் அனைத்தும் ரயில்வே சுரங்கப்பாதை வழியாக திருப்பி விடப்பட்டதால் செல்வவிநாயகபுரத்தில் மேலப்பாவூர் செல்லும் சாலையில் அனைத்து வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து அங்கும் இங்கும் செல்ல வழியில்லாமல் போக்குவரத்து நெரிசலால் சிக்கித் தவித்தன. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் என அனைவரும் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்தனர்.

இந்த நெரிசல் சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. உடனடியாக பாவூர்சத்திரம் போலீசார், ரயில்வே கேட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு அனைத்து வாகனங்களை ஒருவழிபாதையில் திருப்பி விட்டனர். பழுதான ரயில்வே கேட்டை சரி செய்யும் பணியில் ரயில்வே பொறியாளர்கள், பணியாளர்கள் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் கழித்து ரயில்வே கேட் சரி செய்த பிறகு இலகு ரக வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் வழக்கமான பாதை வழியாக இயக்கப்பட்டது..