தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாநில நிர்வாக குழு கூடியது; அன்புமணி மீது நடவடிக்கை பாய்கிறதா? முடிவை நாளை அறிவிக்கிறார் ராமதாஸ்?
திண்டிவனம்: தைலாபுரம் தோட்டத்தில் இன்று ராமதாஸ் தலைமையில் மாநில நிர்வாக குழு கூட்டம் நடந்தது. இதில் கட்சியிலிருந்து அன்புமணியை நீக்குவது சம்பந்தமான இறுதி முடிவு எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பாமகவில் தந்தை ராமதாஸ், மகன் அன்புமணிக்கு இடையோன அதிகார மோதல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தொடர்ந்து கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டு வரும் அன்புமணியை கட்சியை விட்டு நீக்குவது, தேர்தல் பணியை துரிதப்படுத்துவது சம்பந்தமாக நேற்று தைலாபுரம் தோட்டத்தில் பாமக மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள், வன்னியர் சங்க செயலாளர்கள், தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. ஜி.கே.மணி உள்ளிட்ட நிர்வாகிகளுடன் ராமதாசின் மூத்த மகளும், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினருமான ஸ்ரீ காந்தியும் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். அப்போது, அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பது குறித்து பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு பரிந்துரைக்கு மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் தங்கள் முழு ஆதரவை தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து கட்சியின் முக்கிய முடிவுகளை எடுக்கும் உயர்மட்ட அமைப்பான மாநில நிர்வாக குழு கூட்டம் இன்று தைலாபுரத்தில் கூடியது. ராமதாஸ் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் கவுரவ தலைவர் ஜி.கே.மணி, பொதுச்செயலாளர் முரளிசங்கர், பொருளார் சையது மன்சூர் உசேன், ராமதாசின் மூத்த மகள் ஸ்ரீ காந்தி, வன்னியர் சங்க தலைவர் பு.தா.அருள்மொழி, மாஜி ஒன்றிய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி, சுஜாதா கருணாகரன், உள்பட 21 பேர் கலந்துகொண்டனர். இதில் கலந்துகொண்ட பெரும்பாலான நிர்வாகிகள், கட்சி நிறுவன தலைவரை மீறி செயல்பட்டு வரும் அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் கட்சியில் நீடித்து வரும் குழப்பங்களுக்கு ராமதாஸ் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அன்புமணி மீது நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் செய்தால் அது கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என கூறினர். அதற்கு ராமதாஸ், ‘கட்சி பிளவு பட்டுவிடக்கூடாது என்று தான் நான் இத்தனை நாள் பொறுத்திருந்தேன். இனியும் கால தாமதம் செய்ய மாட்டேன். ஒழுங்கு நடவடிக்கை குழுவின் பரிந்துரைகளை விரைவில் அறிவிப்பேன். கட்சியின் விதிமுறைப்படி நடவடிக்கை எடுக்க வேண்டியிருப்பதால் தான் இத்தனை நாள் பொறுத்திருந்தேன். விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி வரும்’ என உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. நாளை (வியாழன்) செய்தியாளர்கள் சந்திப்பில் அன்புமணி மீது நடவடிக்கை குறித்து ராமதாஸ் அதிரடி முடிவுகளை அறிவிப்பார் என தெரிகிறது.