சிவகங்கை: சிவகங்கை அருகே குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இன்மை மற்றும் கொலை சம்பவங்களால் கிராம மக்கள் ஊரை விட்டு வெளியேறி வருகின்றனர். சிவகங்கை அருகே உள்ள நாட்டாகுடி கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வந்தனர். மதுரை சாலை இணைப்பில் இருந்து சுமார் 3 கிமீ தூரத்தில் உள்ள இந்த கிராமத்தில் போதிய குடிநீர் மற்றும் சாலை, பஸ் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாததால் படிப்படியாக ஏராளமானோர் வெளியேறினர். வேலை உள்ளிட்ட காரணங்களுக்காகவும் சிவகங்கை உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமானோர் இடம் பெயர்ந்தனர். இங்கு தேவையான அடிப்படை வசதிகள் இல்லாததால், கிராமத்தில் பெண் எடுக்கவும், பெண் கொடுக்கவும் வெளியூரை சேர்ந்தவர்கள் மறுத்ததால் திருமணம் செய்வதிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. பல மாதங்களுக்கு முன் விவசாயி ஒருவரும், கடந்த 19ம் தேதி முதியவர் ஒருவரும் வெட்டிக் கொலை செய்யப்பட்டனர்.
இக்கொலை சம்பவங்களால் அச்சத்தில் இருந்த கிராமத்தினர் பெரும்பாலானோர் வெளியேறிவிட்டனர். இங்கு வசிக்கும் தங்கராஜ், செல்லம்மாள், காத்தாயி ஆகியோர் கூறுகையில், ‘‘கிராமத்தில் பாதுகாப்பு இல்லாத காரணத்தால் அனைவரும் ஊரை விட்டு வெளியே செல்கின்றனர். தமிழக அரசு உடனடியாக தலையிட்டு மக்களை மீள்குடி அமர்த்த வேண்டும். குடிநீர் வசதி இல்லை, பள்ளிக் கூடம் இல்லை. பிழைக்க வழியில்லை. எனவே தேவையான அடிப்படை வசதிகளை செய்ய வேண்டும்’’ என்றனர். இந்நிலையில் அங்கு ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் நேற்று பார்வையிட சென்றனர். அவர்களிடம் தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பு வசதிகள் செய்ய வேண்டும் என கிராமத்தினர் வலியுறுத்தினர். இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவிப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.