Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

பரக்காணி பகுதியில் வெள்ளத்தில் ஏற்பட்ட பாதிப்பால் தாமிரபரணி ஆற்றில் கலக்கும் கடல் நீர்

* நிதி ஒதுக்கி 15 மாதங்கள் ஆகியும் பணி தொடங்கவில்லை

*மாவட்ட கலெக்டர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நித்திரவிளை : தாமிரபரணி ஆற்றில் கடல் நீர் புகுவதை தடுக்க ஆற்றின் குறுக்கே பரக்காணி பகுதியில் தடுப்பணை அமைக்கப்பட்டது. தடுப்பணை பணி நடக்கும்போது ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போதும், தடுப்பணை பணிகள் முடிந்த பிறகு ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போதும், தடுப்பணையை ஒட்டிய கணியன்குழி பகுதியில் வெள்ளம் புகுந்தது. இதில் அப்பகுதியில் விளை நிலங்கள் பாதிக்கப்பட்டன. நான்கு வீடுகளையும் ஆற்றுநீர் இழுத்து சென்றது. தாமிரபரணி ஆற்றில் மேல்வரத்து தண்ணீர் குறைவாக இருக்கும் காலத்தில் ஆறு இழுத்து சென்ற பகுதி வழியாக கடல்நீர் ஆற்றில் புகுந்து பல கிலோமீட்டர் தூரம் தாமிரபரணி ஆறு உப்பாக மாறிவருகிறது.

கடல்நீர் ஆற்றில் புகுவதை தடுக்கவும், மேலும் வரும் நாட்களில் தாமிரபரணி ஆற்றில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின் போது சேதங்கள் ஏற்படாமல் இருக்க வேண்டியும், தடுப்பணை பணியின் போதும், பணி முடிந்த பிறகும் ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போது கணியன்குழி பகுதியில் ஆற்றுநீர் இழுத்து சென்ற விளை நிலங்களை முழுவதுமாக கிராவல் மண் போட்டு நிரப்பினால் தான் நிரந்தர தீர்வு ஏற்படும் என்று கடந்த 2022ம் ஆண்டு கால கட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து சம்பந்தப்பட்ட இடத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து, வெள்ளப்பெருக்கால் அடித்து செல்லப்பட்ட பகுதியை நிரப்ப 80 ஆயிரம் முதல் ஒரு லட்சம் கனமீட்டர் கிராவல் மண் தேவைப்படும் என்று தமிழக அரசிற்கு அறிக்கை சமர்பித்தனர். இதையடுத்து தமிழக அரசு 2023-2024 நிதியாண்டில் கடந்த வருடம் ஜூன் மாதம் ஆற்றுநீர் இழுத்து சென்ற பகுதியை மண் போட்டு நிரப்ப 2 கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தாமிரபரணி ஆற்றில் உப்புநீர் புகுந்து பொதுமக்கள் மத்தியில் பிரச்னைகள் ஏற்பட்ட வேளையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசிற்கு சொந்தமான கிராவல் மண் எந்த பகுதியில் உள்ளது என்று வருவாய் துறையினர் உதவியுடன் தேடினர். கடைசியாக நட்டாலம் ‘ஏ’ கிராம பகுதியில் தேவையான கிராவல் மண் இருப்பதை கண்டறிந்தனர். இந்நிலையில் கனிமவளத்துறை அதிகாரிகள் நட்டாலம் பகுதியில் உள்ள மண்ணை நாற்கர சாலை பணிக்கு கொடுக்க வேண்டும். அதனால் சிற்றார் அணையின் பக்கவாட்டில் வைக்கப்பட்டுள்ள மண்ணை எடுத்து பயன்படுத்தி கொள்ள கூறியுள்ளனர்.

சிற்றார் பகுதியில் இருந்து தாமிரபரணி ஆறு கணியன்குழி பகுதிக்கு மண் கொண்டு வருவதற்கு சுமார் 40 கிலோமீட்டர் தூரம் உள்ளது. அதேவேளையில் நட்டாலம் பகுதியில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரம் தான் உள்ளது.

அரசு ஒதுக்கியுள்ள நிதியின்படி டெண்டர் கோரினால் சிற்றாரில் இருந்து மண் கொண்டு வர போக்குவரத்து செலவு அதிகமாக உள்ளதால் தாமிரபரணி ஆறு கணியன்குழி பகுதியில் இழுத்து சென்ற நிலத்தில் பாதியளவு தான் மண் போட்டு நிரப்ப முடியும். இதனால் பணி முழுவதும் முடிவடையாமல் பாதியில் நிற்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

பொதுமக்களின் குடிநீராதரத்தை பாதுகாக்கவும், தாமிரபரணி ஆற்றை பாதுகாக்கவும், தமிழக அரசு 2 கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து பதினைந்து மாதங்கள் கடந்த நிலையில், கடல் நீர் தாமிரபரணி ஆற்றில் நேரடியாக கலப்பதை தடுக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. ஆகவே மாவட்ட ஆட்சியர் நேரடி கவனம் செலுத்தி நட்டாலம் பகுதியில் இருந்து கிராவல் மண்ணை கொண்டு வந்து தாமிரபரணி ஆறு இழுத்து சென்று தற்போது கடல்நீர் தேங்கி நிற்கும் கணியன்குழி பகுதியில் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.